கைவளைத்து காதை தொட்டதுமுதல்
கால்தூசி தட்டி வெளியேறியது வரை
ஆயிரம் நினைவுகள்... – எங்கள்
சிறுமலர் ஆரம்ப பள்ளியில்...!
எந்த நாளாயினும், காலை பூசையை காணாவிடினும்
மாதா கெபிமுன் கூட்டம் சேர்ந்துவிடும்...
தரிசிப்பதைவிட வருகையை உருதிபடுத்ததான் - இது
அடிக்கு பயந்துதான் என்றாலும்
நேரம் தவறாமை, காலை துயில் எழுதலென
கற்று தந்ததும் அதுதானே - நான்
இன்றும் உணர்கிறேன் அலாரத்தின் ஒலிகளில்...!
பள்ளி துவக்கமணி அடிக்க விறுவிறுப்பு
மதர் மேடையை கடந்து வந்த சாவிகள்...
வகுப்புதான்டாமல் இருப்பவனும், உயர்ந்தவனாக்கப்படுகிறான்
எனது பள்ளியை மணியடித்து துவங்கி வைக்கும்பொழுது...!
காலைதோறும் உறுதிமொழி, ஆசிரியர் உரை வேண்டும்
அட்டையை பார்க்க புத்தகங்களுக்கு ஜூன் ஓன்று வேண்டும்
துவைத்த பைகளின் கலரைகாண புதுவருடம் வேண்டும்
வருடம்பார்த்து கிடைக்கும் அரசு துணி மற்றும் காலணிகள்
அளவுதான் சரியாய் அமையவேண்டும்..!
மேசை, நாற்காலி இல்லா வகுப்புகள்
தட்டி வைத்து பிரித்திரிந்த வகுப்பறைகள்
கம்பிகள் இல்லா ஜன்னல் கதவுகள்
ஆசிரியர் வகுப்பில் இல்லை என்பதை
காட்டிகொடுக்க அதுபோதும்...!
இன்றைய நாள் சிறப்பாய் அமைய
ஜோதிடர்களை நாடியதில்லை – ஆசிரியர்கள் வரும்
9 மணிபேருந்தின் வருகை ஒன்றே போதும்...!
கட்ட, நெட்ட என ஆசிரியர்கள் வேறுபாடு
வகுப்புக்குள் வந்துவிட்டால் தாறுமாறு...
ஓன்று, இரண்டிலே தயாராகிவிடுவோம்
பெரிய வகுப்பு மாணவர்களின் கதரலைக்கேட்டு...!
பள்ளி வகுப்பு கால அட்டவணையில்
விளையாட்டு நேரம் அதிகமாகவும்
கட்ட மற்றும் நெட்ட ஆசிரியர்களின்
பாடநேரம் குறைவாகவும் இருந்தாலே - அந்த
வருடம் சொர்க்கம்தான்...!
கத்தியெடுத்தவன் கத்தியால் அழிவான் என்பதுபோல் – இங்கு
பிரம்பு கொடுத்தவன் பிரம்பால் அடிவாங்குவான் என்பது
எழுதப்படாத சதிகோட்பாடு..!
ஒரே ஊர் என்பதால் விடுமுறையெடுக்க
காரணங்கள் முளைப்பதில்லை.. - அப்படி எடுத்தாலும்
சோதனைசெய்ய CBI ஆபிசர்கள் வீட்டுக்கே வராமலிருப்பதுமில்லை
குண்டுகட்டாக தூக்கிசெல்வதே அவர்களின் வேலை
பொய்களுக்கு செமையான மருந்து கொடுக்கப்படும்
எல்லா ஓலங்களுக்கும் பிறகு...!
கையெழுத்து திருந்த எத்தனைமுறை
கைகளை பிரம்புகள் பதம்பார்த்திருக்கும்
பெற்றோரை அழைத்துவந்தும் உபயோகமில்லை
பெற்றோர்முன் காதைகிள்ளும் ஆசிரியரை
கண்டும்காணாமல் இருப்பதே அவர்ககளின் நிலைமை - ஏனெனில்
அவர்கள் காதிலும் தடம்பதித்த கைகள்தானே...!
அடித்தாலும், நுள்ளினாலும்
வழியும் மூக்கினையும், கண்ணீரையும் துடைக்கும்
மதர்களையும், ஆசிரியர்களையும் முறைக்கமுடியுமா..!
சூசையப்பர் சுரூபம் கீழே விளக்குத்தண்டு
அணில்வந்து செல்லும், நாம் போடும் குச்சிகளை சாப்பிடும்
எனும் வதந்தி பள்ளி முழுவதும் உண்டு...
சூசையப்பரை விட, அதன்கீழ் குச்சியைபோட்டு
அனிலிடம் வேண்டுதல் வைத்ததே அதிகம்..!
தலைவர்கள் பிறந்தநாளில் மட்டும் ஸ்பெஷல் புளிசாதம்..
விடுமுறைநாளாயினும் அடைக்கலாமாயிடுவோம்
ஒரு ஆப்பை மிச்சம் கொசுறு சாதம்
பாத்திரங்கள் விரும்புவதில்லை..
வாலங்காய் இலைதான் வாழ்வளிக்கும்..
கைப்பிடி சோறாயினும் வீடுவரை கொண்டு செல்வதில்
கண்ணிமைக்கா கவனம் தேவைப்படும்..!
பள்ளியைதாண்டி ஒரு கல்விநிலையம் உண்டு
திரேஸ் அக்கா வீடு
புத்தகப்பைகள் விழிப்பதும் தூங்குவதும் அங்கேதான்
அவர்களுக்கு ஓலைமுனைதல் தொழிலானாலும் - அதன்
கம்புகள் தான் அதிகமாக பிய்யப்படுகின்றன...!
மதியஉணவு இடைவேளை சிறிதெனினும்
அதனுள் ஆயிரம் சந்தோசங்கள் புதைந்திருக்கும்
தெளிந்து மேலோட்டமான பருப்பும், சாதமும் வாங்கு - என
பாத்திரத்தை பத்திரப்படுத்திக்கொண்டு - கிளம்பும்
ஒலிம்பிக் ஓட்டம் - வீட்டில்
குழம்போ, தொவையலோ கிடைத்ததை வாரிக்கொண்டு
சாப்பிட வரிசைமுடியுமுன் வந்துநிற்கும் – அதற்காக
ஒரு கும்பலே காவலுமிருக்கும்...!
காலை கடன்களை மதியம் கழிப்பதற்கு ஜாலி வாக்கிங்
சிலபல விளையாட்டும்
ஊசி இலையை தேடி எடுப்பதும்
தினம்தோறும் அரங்கேறும்..!
உண்ட மயக்கம் தீர மாலைதான் விளையாட்டு வகுப்புகள்
அங்கு தனிதன்மை சார்பு விளையாட்டுகளைவிட
குழுக்களுக்கான விளையாட்டுகளே அதிகம்...
தோட்ட பராமரிப்பு, பள்ளி பராமரிப்பு – என
எதுவாயினும் சலிப்பதில்லை
நல்ல விளக்குமாறு அடுத்தவன் எடுத்துவிட்டான் - என
ஆதங்கபட்டதுதான் அதிகம்...!
பள்ளி கிணறுதான் வற்றாதது
துள்ளித்தான் பார்ப்பதாயினும்
தூர்வாற அஞ்சுவதில்லை...
தினமும் நீர் இறைக்கும் வாளி
கிணற்றுக்குள் கைரிழந்து செல்லும் தவறியல்ல
வாளியை வெளியிலெடுக்க கருவியைதேடுவதை விட
மதர்களை தேடுவார்கள்..
எப்போது சென்றாலும் இனிப்புகள் வழங்கி
இனிதாய் வரவேற்ப்பது அவர்கள்தானே...!
சிலுவைபாதை வழிபாடுகளில் கலந்து நல்லவனாய் காட்டிலும்
அமராவதிவிளை பாறைகளில் ஒளிந்து, பள்ளிக்கு செல்லாமல்
இயேசுவின் சீடர்கள்போல் மாறிவிடுகிறோம் என்பது உண்மை...!
பேக்கரியும் பீசாவும், கப்சியும் காணாத காலத்தில்
இனிப்புகளை பிரித்து வகைப்படுத்தி தர
இருதயராஜ் அண்ணனின் கடைதவிர வேறு உண்டா..
கல்கோனாவிலே எத்தனை பல்கள் உடைந்தது யாருக்குதெரியும்..
இலந்தை பழமும், பொடியும் சுவைக்காத வாய்கள் உண்டா
தேன்மிட்டாயும், ஆரஞ்சு மிட்டாயும் எத்தனை
பிறந்தநாள்களை வசீகரித்துள்ளன...!
சட்டை பொத்தான்களையும்,
அரைக்கால் டவுசர்களின் ஓட்டைகளை அடைப்பதே
புது துணி கிடைக்கும்வரை அம்மக்களுக்கு
கொடுக்கப்படும் தலையாய வேலை..!
எங்களது கால்களை கண்டதும் செருப்புக்கு
என்ன கோபமா கடித்து வைத்துவிடுகிறது..
அதனால்தான் என்னவோ
காடுகள், வரப்புகள், குளங்கள் என
எங்கள் பாதசுவடுகள் பதியாத இடமில்லை...!
குளம் வற்றினாலும்
மழைவெள்ளம் வந்தாலும்
கிணறு தூர்வாரினாலும் - அங்கு
இல்லாமல் இருப்பதில்லை - எவ்வளவுதான் கிடைத்தாலும்
சமநிலை பகிர்வை மறப்பதில்லை...!
மரம் மற்றும் மலைகள் ஏறுதல், மீன் பிடித்தல், நீச்சல் அடித்தல்
மண் வெட்டுதல், களை பறித்தல், சுடுக்காய் தேடுதல்
சுக்குநாறி பறித்தல், நாற்று நடுதல், விழாக்களை சிறப்பித்தல்
என அடுக்கிகொண்டே போகலாம் – ஆனால்
எதற்கும் ஆசான்கள் தேவைப்பட்டதுமில்லை
கால்கள் அமைதியாய் வீட்டில் உறங்கியதுமில்லை
உடம்பு பெருத்த, கண்ணாடி அணிந்த மாணவர்களையும்
எங்கள் பருவத்தில் கண்டதுமில்லை...!
இன்னும் எத்தனையோ நினைவுகள் மறந்தாலும்
பள்ளியில் கடந்துவந்ததை யாரும் மறப்பதில்லை...
அறிவும், அன்பும், ஒற்றுமையும் சேர்ந்த கூடாரமது – இன்று
ஆங்கிலகல்வியென தனிமைப்படுத்துவதை நினைத்து
கண் கலங்குகிறது...
உங்கள் மூளைக்கு தீனிபோட்டது
உங்கள் பிள்ளைகளை பட்டினி போடுமா..
நமது பெருமை
இல்லாத செல்வங்களை திரட்டுவது அல்ல
இருக்கிற செல்வங்களை பாதுகாப்பதே..!
.
.
- J. பிரிட்டோ ராஜ், Ramanathichen Puthur.
Nice
ReplyDeleteThank you..
DeleteNice
ReplyDeleteThank you..
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் அன்பு பிரிட்டோ! உனது இந்த அனுபவத்தில் நானும் உடனிருந்த ஒருவன் என்பதை நினைக்கும் போது நெஞ்சம் நெகிழ்ச்சியடைகிறது. காலம் உருண்டு உருண்டு எங்குதான் நம்மைக் கொண்டு சேர்க்குமோ? புரியாத புதிர் என்பதால் தான் வாழ்க்கை இவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்கிறதோ? ரொம்ப நன்றி நண்பா நினைவுகளைப் பதிவு செய்தமைக்கு! அத்தோடு சமுதாயச் சிந்தனையும் பாராட்டத் தக்கதே! கடவுள் உன்னை நிறைவாக ஆசிர்வதிக்கட்டும்.
ReplyDeleteநீயில்லாமல் இந்த நினைவுகள் பூர்த்தி ஆகுமா... உண்மைதான் நண்பா.. அந்த காலத்தை மீட்டெடுப்பது இயலாத ஓன்று.. ஆனால் எல்லோ சந்தோசங்களையும் அனுபவித்துதான் கடந்து வந்துள்ளோம் என்பதே மனநிறைவை தருகிறது. மிக்க நன்றி நண்பா பாராட்டியதற்கு..!
Delete