1. நம்மை
கிறிஸ்துவின் பாதையில் வழிநடத்தும் திருச்சபைக்காக பரிந்துரைப்போம்,
பணிவிடை புரியவே வந்தேன் என்று சொன்ன இறைவா!, திருச்சபையை வழிநடத்தும்
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள், துறவறத்தார்
மற்றும் பொதுநிலையினர் அனைவரையும் உடல் உள்ள ஆன்ம நலனோடு வாழவும், உமது இரக்கத்தின் கருவிகளாக செயல்பட்டு, மக்களிடையே பிறரன்பு செயல்களைத் தூண்டி எழுப்புபவர்களாகத்
திகழ உதவுமாறு, உமது கருணைக் கண்களைத் இவர்கள்மீது திருப்பியருளும். உமது அன்புக்குப்
பாத்திரமான இவர்களை உமது ஆசீரால் உறுதிப்படுத்தி பிறரை மீட்பின் பாதையில்
வழிநடத்தும் ஞானத்தையும், பல சிரமங்களின்
மத்தியில், பல சாவால்களுக்கு மத்தியில், பல நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இத்திருச்சபையை
கட்டியெழுப்பும் மாபெரும் பணியை ஏற்று வழிநடத்தும், இவர்களது இறைபணிகள் ஒருபோதும்
தடைபட்டு போகாதபடி காத்துக்கொள்ளும்.
அன்று மீன் பிடிப்போரை, மனிதரைப் பிடிப்போராக்கிய ஆண்டவரே! இன்று ஆர்வமும் தாராள மனமும் கொண்டுள்ள இளையோரை உம்மைப் பின்பற்றுபவர்களாகவும், உம் திருப்பணியாளர்களாகவும் ஆக்கியருளும். அனைத்துலக மக்களின் மீட்புக்காக, உமக்கிருக்கும் தாகத்தில் அவர்களும் பங்குபெறச் செய்தருளும்.
அன்பின் ஆண்டவரே எமது திருச்சபையை உம்முடைய கரங்களில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறோம். இதுவரை காலமும் எமது திருச்சபையை நீர் உரமிட்டு நீர்பாய்ச்சி, அனைவருக்கும் பயன் தரக்கூடிய விதத்தில் மாற்றியிருக்கிற நன்மைதனத்திற்க்காக உம்மை நன்றியோடு துதிக்கிறோம் ஆண்டவரே, இனியும், இனிவரும் நாட்களும், இறை ஆறதல், சமாதானம், சந்தோஷம் தருகிற இடமாக இவ்வாலயம் தொடர்ந்து விளங்க, உம் இருதயமும், உம் பார்வையும் எங்கள்மேல் இருக்க அருள்தரவேண்டி இயேசுவின் தூய பெயரில் பரிந்துரைக்கிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும்.
2. உலக அமைதி
மற்றும் சிறையில் வாடுவோருக்காக பரிந்துரைப்போம்
அமைதியின் அரசராகிய இயேசுவே, அதிகார வெறியில், ஆணவத்தில் ஆட்சிசெய்யும் இன்றைய
ஆட்சியாளர்களால், இழக்க ஏதுமின்றி, முடிவில்லா துயரங்களை சுமந்தபடி வாழும் எங்கள்
வாழ்க்கையை ஏறெடுத்துப்பாரும். உலகெங்கும் கிட்டாத மன ஆறுதல், உமது இல்லத்தில்
கிட்டும் என்ற நம்பிக்கையுடன் உம்மை நாடி ஓடோடி வருகின்றோம். எங்கள் மனவேதனைகளை மகிழ்ச்சியாக மாற்றும், அமைதியின்றி வாழும் எம் இதயங்களுக்கு, மகிழ்ச்சியும்
சமாதானமும் நிரந்தரமாக கிடைக்க துணைபுரியும். செய்யாத குற்றங்களுக்கு தண்டனையும்,
செய்த குற்றங்களை நினைத்து மனம் வெதும்பி சிறையில் வாடும் எம் மக்களுக்கு நீரே
இரக்கம் காட்ட வேண்டும். நல்ல தீர்ப்பு வேண்டியும், செய்த பாவத்திற்கு மன்னிப்பு
வேண்டியும், உம் பாதம் பணிந்து கண்ணீரோடு புலம்பி நிற்கிறார்கள். அவர்களது
வாழ்வாதாரங்களுக்கு நல்ல வழியைக்காட்டி, சிறந்த சாட்சிகளாய் விளங்குமாறு
மாற்றியருளும்.
துன்பம், துக்கம், துயரம், வேதனை, சாமாதானம் இன்மை, பயம், விலைவாசி உயர்வு இவ்வாறாக நாளுக்கு நாள் தேசத்தின் நிலைகள் மாறிக்கொண்டு நிம்மதியற்றத்தனமாக இருக்கிறது. எங்கள் நாட்டை வழிநடத்திடும் தலைவர்கள் சுயநலத்தில் மூழ்கிடாது, நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தந்து, உலகமெங்கும் அமைதியும், பாதுகாப்பும், வளமான வாழ்வும், சமய உரிமையும் நிலைபெறுமாறு, எங்கள் தலைவர்களை உம்முடைய ஞானத்தால் நிரப்பி, அவர்கள் உண்மையான மக்கள் தொண்டர்களாக விளங்கிடச் செய்து, அகில உலகமெங்கும் அமைதி சாமாதானம் நிலவ அருள்தரவேண்டி இயேசுவின் தூய பெயரில் பரிந்துரைக்கிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும்.
3. நமது பங்கின்
குடும்பங்களுக்காகவும் மற்றும் நமது குடும்பங்களுக்காகவும் பரிந்துரைப்போம்,
எங்கள் அன்பான தந்தையே! எங்கள் பங்கின் அனைத்து குடும்பங்களையும் உமது அன்பின்
கரங்களில் ஒப்படைத்து பரிந்துரைக்கின்றோம். எங்கள் குடும்பம், திருக்குடும்பத்தை
போல ஒன்றிணைந்த மனதுடன் வாழ்ந்து, அன்பும் அமைதியும், ஒருவருக்கொருவர் உதவும்
பண்பும் நாள்தோறும் வளர அருள்புரியும். வீடு கட்டுபவர்கள், திருமண
காரியங்களுக்காகவும், பிள்ளை வரம் வேண்டி வேண்டுபவர்களுக்கு, உமது தெய்வீக
சித்தத்தின்படி, ஆசீர்வதித்து அருளியருளும். எங்கள் தொழில்களையும், உடல் ஆரோக்கியத்தையும் கண்பாரும். எங்களுக்கு உழைப்பில் ஏற்படும் களைப்பு, வலி, துன்ப வருத்தங்கள்
அனைத்தையும் நீக்கியருளும். எங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் வேலை செய்யும்
இடங்களிலும், பயணங்களிலும் நீர்கூட
இருந்து கரம் பிடித்து நடத்தும். எங்கள் குடும்பத்திற்கு வேண்டிய வருமானத்தைத் தந்து,
எங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும். எங்கள் பிள்ளைகளை உம்முடைய
கரத்தில் அர்ப்பணிக்கிறோம். அவர்களை உம்முடைய ஞானத்தினாலும், புத்தியினாலும் நிரப்பும். அவர்களுக்கு உடலில் நல்ல
சுகத்தையும், வலிமையையும் தந்து, உமக்குப்
பிரியமான பிள்ளைகளாக வாழ உதவி செய்யும்.
எங்கள் குடும்பத்தில், சமூகத்தில் நடைபெற இருக்கின்ற மங்களகரமான சுபகாரியங்கள், ஆலய திருவிழாக்கள், புதிய தொழிற்முயற்சிகள், பயணங்கள் போன்ற அனைத்து நிகழ்வுகளும் எவ்வித இடையூறுகள், தடைகள் ஏதுமின்றி சிறப்புடன் நடைபெற அருள்தாரும்.
வேலையைத்தேடும் இளைஞர்களுக்கு, அவர்கள் திறமைகளுக்கேற்ப, நல்ல வேலைவாய்ப்புகள் கிடைத்திடவும், அவர்கள் முன்னெடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றிபெற்றவர்களாக, உண்மையின் வழிகளை உலகிற்கு காட்டிய உமது வழியில் இளையோர் பயணிக்க, அருள் தாரும்.
தந்தையே ஆண்டவரே இந்த நாளிலும் பலவிதமான பாடுகள், பல விதமான துன்பங்கள் பல விதமான தொல்லைகள் இவற்றின் மத்தியிலே சிக்கி, சிதைந்து, மனம் உடைந்து நிம்மதி இழந்து சமாதானத்தை பறிகொடுத்து, இந்த நாளிலும் உமது திருச்சன்னிதானத்திலே கண்ணீரோடு புலம்பிக்கொண்டிருக்கிற ஒவ்வொரு குடும்பங்கள்மேலும், உம்முடைய பிரசன்னம், உம்முடைய ஆறுதல், உம்முடைய சமாதானம் தங்கும் படியாகவும், அவர்களுக்கு எந்த ஒரு நோயுமின்றி, மனதில் கலக்கம் எதுவும் இன்றி, அமைதியான, நிறைவான, அன்பான, ஆசீர்வாதமான குடும்ப வாழ்வாக மாற அருள்தரவேண்டி இயேசுவின் தூய பெயரில் பரிந்துரைக்கிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும்.
4. நோயினால்
அவதியுற்று துன்புறுபவர்களுக்காக பரிந்துரைப்போம்,
குணப்படுத்தும் குணாளனே இறைவா! பாவத்திலிருந்து எங்களை மீட்கவும், துன்பத்திலிருந்து எங்களை விடுவிக்கவும், உம் திருவுளப்படி மனிதனாக எங்களிடையே தோன்றினீர். துயருற்றோர்க்கு
ஆறதலும், வருந்துவோர்க்குத் திடனும்
நீரே. எத்தகையே துன்ப வேளையிலும் உம்மை நோக்கிக் கூவியழைப்போரின் வேண்டுதலைக் கேட்பவரும்
நீரே. இத்தருணத்திலே எல்லா நோயாளிகளுக்காகவும் உம்மை நோக்கி மன்றாடுகிறோம். உமது சித்தப்படி
எங்களின் வேதனையை நீக்கி, நோயை குணமாக்கியருளும். உமது இரக்கத்தால் உள்ளத்திலும், உடலிலும் நாங்கள் நலம் பெற்று மீண்டும் உமக்கு நன்றி
செலுத்துவார்களாக விளங்கிட அருள் புரியும். தம்மை அண்டிவந்த நோயாளிகளின்
துயரைக்கண்டு மனமிரங்கி, நோயாளிகளும், அங்கம் குறைந்தவர்களும்,
தீராத நோயால்
துன்புறுவோரும், கனிவான உமது கரம்
தொட்டவுடனே குணம் அடைந்தனர். இங்கே குழுமியிருக்கும் நோயாளிகள் எல்லோரையும் அதே
அன்புக்கரத்தால் தொட்டு குணமாக்க வேண்டுமென்று தாழ்ந்த உள்ளத்தோடு உம்மிடம்
பரிந்துரைக்கிறோம்.
இன்றைய பரிந்துரையில் பங்கேற்க வந்திருக்கும் மற்றும் உடல் நோயினால் வர இயலாத அனைவரையும் ஆசீர்வதியும். அவர்களது உம்மீது கொண்ட நம்பிக்கைக்கு ஏற்ப, உம் அருட்கரத்தினால் தொட்டு குணமாக்கிவிடும்.
நோய்களால் நாங்கள் துன்புறுகையில், உமது ஆறுதலின் இனிய அமுதம் எங்கள்மேல் வழிந்தோடட்டும். இவ்வுலகத் துன்பமெல்லாம் கொஞ்ச நாளுக்குத்தான் என்ற உயரிய உண்மை எங்கள் உள்ளத்தை நிரப்பட்டும். அன்பும், இரக்கமும் உள்ள இயேசுவே! துன்பங்களைத் திடமனத்துடன் சகித்துக் கொள்ளவும், உமது திருவுளத்திற்குப் பணிந்து நடக்கவும், நாங்கள் உம்மீது கொண்ட அளவற்ற நம்பிக்கையால், எங்கள் நோய்கள், பிணிகள், சாபங்கள் நீங்கி நிம்மதியான வாழ்வுவாழ அருள்தரவேண்டி இயேசுவின் தூய பெயரில் பரிந்துரைக்கிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும்.
5. தமிழ் கத்தோலிக்க
சமூக, பரிந்துரை
குழுவிற்காக பரிந்துரைப்போம்,
அயலாருக்கு பரிந்துரைக்கும் ஒப்பற்ற இறைபணியை அருளிய இறைவா, ‘என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான்
உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு
எட்டாததுமாகிய பெரிய காரியங்களைச் செய்வேன்’
என்று வாக்களித்த
தேவனே! உமது இறைவார்த்தையை பரிந்துரைகள் மூலம் எங்கள் உள்ளத்தில் நிலைநிறுத்தி,
அவ்வார்த்தைகள் எங்கள் வாழ்க்கையில் பலன் தரவும், உம்மை முழுமையாக
விசுவசிக்கவும், உமது வார்த்தைகள் எங்களில் வளரவும் எங்களுக்கு உதவி செய்தருளும்.
நீர் உமது வழியை எங்களுக்குக்காட்டி, நாங்கள் உமது அருளை, மன்னிக்கும் அன்பை பரிந்துரைகள் மூலம் எங்கும் பரப்பவும்,
மற்றவர்களுக்கு எடுத்துக் கூறவும் எங்களை பயன்படுத்தும்.
‘என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை’ என்று வாக்களித்த இறைவா, எங்கள் பரிந்துரைகள் வாயிலாக, உமது அருளால், உலகிலிருந்து தவறுகள் அகலவும், பிணிகள் நீங்கிப் பஞ்சம் ஒழியவும், சிறைகள் திறக்கப்பட்டுத் தளைகள் தகர்க்கப்படவும், வழிப்போக்கர் பாதுகாப்புப் பெறவும், பயணம் செய்வோர் நலமாக வீடு திரும்பவும், நோயுற்றோர் நலம் பெறவும், இறக்கின்றவர் மீட்பின் நிறைவு பெறவும் அருள் புரியும்.
இறை இரக்கத்தில் பக்தி கொண்டு பரிந்துரைகள் செய்வதன் மூலம், உருகும் விழிகளின் விழிநீர் துடைத்து, அவர்களுக்கும் விடியும் பொழுதுகள் எல்லாம் இனிமைகளை தாங்கி வரும் விடிவெள்ளிகளாக மாறி, தினமும் மகிழ வேண்டிய மனங்களாக, மகிழ்வினில் திகழ எங்கள் பரிந்துரையும் ஒரு கருவியாக மாற அருள்தரவேண்டி இயேசுவின் தூய பெயரில் பரிந்துரைக்கிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும்.
6. இன்று
பரிந்துரையில் பங்கேற்றவர்களுக்காகவும், பங்கேற்க முடியாமல் தவிப்பவர்களுக்காகவும்
பரிந்துரைப்போம்.
கேளுங்கள் உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள் என்று
வாக்குரைத்த நல்ல தகப்பனே, இவ்வளவு நேரமும், நாங்கள் பரிந்துரைத்த எங்கள் சந்தோஷம்,
எங்கள் ஆதங்கங்கள், எங்கள் புலம்பல்கள், எங்கள் வாழ்வின் ஏற்ற தாழ்வுகள், வறுமை, பிணிகள் அனைத்தையும்
உம்மிடம் ஒப்புவிக்கிறோம். எங்களுக்கு எது நல்லது எது கெட்டது என்று
அறிந்துவைத்திருக்கின்ற நீர், நாங்கள் வேண்டிக்கொண்ட மன்றாட்டுக்கள் அனைத்தும் நிறைவேரும்படி,
சித்தம் வைத்தாலே போதும், எங்கள் மன்றாட்டும் பிரார்த்தனைகளும் அனுகூலமாகும். எங்கள்
நேச இயேசுவே, தேவரீருடைய தஞ்சமாக ஓடிவந்தோம். இக்கட்டு இடைஞ்சலில் எங்கள் ஆறுதல்
நீரே. துன்ப துயரத்தில் எங்கள் அடைக்கலம் நீரே;
சோதனை தருணத்தில்
எங்களுக்கு ஊன்றுகோல் நீரே. இதோ உமது இரக்கமுள்ள கண்களால் எங்களை நோக்கியருளும். நாங்கள்
உம்மை ஒரு போதும் மறவாமலும், உம்மைவிட்டுப் பிரியாமலும்
இருக்க, உம் தூய அன்பை எங்கள்
இதயத்தில் பதிப்பித்தருளும்.
இரக்கம் மிகுந்த இயேசுவே! நன்மையின் உருவே! உம்மிடம் மீட்பையும், கருணையையும்
தேடும் எவரையும் நீர் மறந்ததில்லை. இன்று பரிந்துரைக்கு வரமுடியாமல் தவிக்கும் எமது
பங்கு மக்களை உமது கரங்களில் ஒப்படைக்கின்றோம். அவர்களின் உள்ளத் தேவைகளை,
ஏக்கத்தவிப்புக்களை நீரே பூர்த்தி செய்தருளும். நாங்கள் அனைவரும் வாழ்வுதரும்
உணவாகிய உம்மையே பெற்றுக்கொள்ளவும் உம்மையே ஆர்வத்தோடு தேடவும், உம்மைப்போல்
பிறரிடத்தில் அன்புகொண்டு வாழவும் அருள்தரவேண்டி இயேசுவின் தூய பெயரில்
பரிந்துரைக்கிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும்.
No comments:
Post a Comment
Do U Like This...