Thursday, March 8, 2018

விவாதங்கள் எனும் இல்லுமினாட்டி (Importance of Social Media Discussions)

விவாதங்கள் எனும் இல்லுமினாட்டி..!!!

காலங்களின் வளர்ச்சி - நம்முள்
பிரிவினையை உறுவாக்குமோ...
உலகநாட்டங்களின் புணர்ச்சி - நம்மை
விரோதியாக மாற்றுமோ...!

வசைபாடும் வலைத்தளங்கள்
தனிமைப்படுத்தும் தொலைதொடர்பு சாதனங்கள்
வாழ்க்கை மனிதனுக்காகவா - இல்லை
இயந்திரத்திற்காகவா...!

தொலைபேசி இல்லாதபோது 
நேரில் உதவுபவன் கடவுளாய் தெரிந்தான்...
பொழுதுபோக்குகள் இல்லாதபோது
உறவின் அன்பு புனிதமாய் இருந்தது - இன்று
யார் கடவுள் என வாக்குவாதமிடுகிறோம்...!

ஜாதியை தெளிவுபடுத்த ஆயிரம் உரையாடல்கள்
மதத்தை தெளிவுபடுத்த ஆயிரம் உரையாடல்கள்
இனத்தை தெளிவுபடுத்த ஆயிரம் உரையாடல்கள்
மொழியை தெளிவுபடுத்த ஆயிரம் உரையாடல்கள்
மனிதத்தை தெளிவுபடுத்த இத்தனை பதிவுகள் வேண்டுமா...!

ஜாதியால் மக்கள் தாழ்த்தப்படுகிறார்கள்
கடவுள் நம்பிக்கையால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்
இனவேற்றுமையால் மக்கள் அழிக்கப்படுகிறார்கள்
மொழி பிரிவினையால் மக்கள் ஒதுக்கப்படுகிறார்கள்...
எத்தனையாயிரம் வலைதள பதிவுகள்
வலுக்கும் உரையாடல்கள் - எங்கே
இவற்றை ஆரம்பித்து வைக்கிறோம்...!

நண்பா நமக்கு என்ன வேண்டும்..
பிறரை அவமானப்படுத்தி ரசிப்பதா - இல்லை
பிறருக்கு ஆபத்தில் உதவுபவனாய் இருப்பதா...
பிறரின் வாழ்வாதாரங்களை பறிப்பதா - இல்லை
அடிமையாக வாழ்பவனை கைதூக்கிவிடுவதா...
பிறரின் உறவுகளை தூக்கி எறிவதா - இல்லை
ஒவ்வொருவருக்கும் அன்பில் வாழ்வதா...
நம் சொல் செயலால் பிறரை நோகடிப்பதா - இல்லை
நல்மனிதத்தை நமக்குள் அறுவடை செய்வதா...
ஒருவருக்கொருவர் பகைவராக வாழ்வதா - இல்லை
தன்னைப்போல் பிறரையும் நேசிப்பதா...!

தன் வார்த்தையாலும் வாழ்வாலும்
எல்லா மதஇனமொழிகளும்
யாரையும் கலங்கப்படுத்துவதில்லை - மாறாக
தன் சொல்லாலும் செயலாலும்
மனிதன் இவற்றை கலங்கப்படுத்துகிறான்...
குறைகள் உலகமெங்கும் நிறைந்துள்ளது - அதன்
நிறைகள் நாம்தானென எப்போது புரிவது..!

வலைத்தளங்களில் இனிமேலும் 
ஜாதிகளினால் சண்டையிடுவதா - இல்லை
தாழந்தவனை உயர்ந்தோனாக்க முயற்சிப்பதா...
மதத்தினால் சண்டையிடுவதா - இல்லை
மதங்களின் நல்போதனைகளை கடைபிடிப்பதா...
இனபாகுபாடால் சண்டையிடுவதா - இல்லை
ஒரேகுலமென தோள்கொடுப்பதா...
மொழி பிரிவினையால் சண்டையிடுவதா - இல்லை
ஒருவருக்கொருவர் சொல்லிகொடுத்து வாழ்வதா...!

வாழ்க்கை மிகப்பெரியது - நாம்
ஒரு குருகிய வட்டத்தில் அடைபட்டுகிடக்கிறோம்...
வலைதள வீண்விவாதங்களை குறையுங்கள் - மாறாக
வாழ்வாதாரத்திற்கான வழியை கற்பியுங்கள்...!

கல்வியின் தரங்களை வினவுங்கள்
கற்றலின் பயனை உரையாடுங்கள்
சிறு தொழில் முயற்சியை பேசுங்கள்
கடனில் மூழ்குவோருக்கு ஆலோசனை அளியுங்கள்
சமூக வளர்ச்சியை கலந்துரையாடுங்கள்
நாட்டின் முன்னேற்றத்தை கண்கானியுங்கள்
மாற்று எரிசக்திபற்றி விவாதியுங்கள்
உண்ணும் உணவிற்கு வழிசொல்லுங்கள்
அரசின் திட்டங்களை கொண்டுசேருங்கள்
ஆதரவற்றோரின் நலன்களை எடுத்துரையுங்கள்
இன்னும் எத்தனை எத்தனையோ
வாழ்வாதார உரையாடல்களிருக்க - நாம்
எதனுள் மூழ்கிக்கிடக்கிறோம்...!

சமூக வலைத்தளங்களில்...
ஜாதி மத இன மொழி உரையாடலை தவிர்த்து
மனிதத்தை வளருங்கள்... - அப்போது
ஜாதிகள் ஒழியும்
மதத்தின் புனிதம் காக்கப்படும்
இனத்தின் தன்மைகள் உணர்த்தப்படும்
மொழிகளின் உணர்வு பிரதிபலிக்கப்படும்..
மனித வாழ்வாதாரங்களை போதியுங்கள் - நம்
உரையாடல்களை நிஜமாக்குங்கள்...!
.
.
- ஜோ. பிரிட்டோ ராஜ்

No comments:

Post a Comment

Do U Like This...