Wednesday, March 14, 2018

விவசாய சுதந்திரம்...! (Independence for Farmers)



விவசாய சுதந்திரம்...!

வீடு வீடா கடனை பெற்று
வித்து வாங்கி உழுது போட்டேன்...
பருவம் பார்த்து விதைத்ததாலோ - நான்
விதைச்ச பலன் விளைஞ்சு நின்னு...!

காற்றுக்கொரு சேதிசொன்னேன் – எனை
கடனாளியாக்காம கடந்துபோ...
மழைக்கொரு சேதி சொன்னேன் – என்
மண்ணை வாடாம பார்த்துக்கோ...
நிலத்துக்கொரு சேதிச்சொன்னேன் - என்
வயிறு காயாம வளர்ந்துக்கோ... - எல்லாம்
ஒன்றாய் பதில் சொன்னது
உனக்காகத்தான் நாங்கள் என்று..!

விட்டகுறை தொட்டகுறையாய்
நல்ல மகசூல் பார்த்து நிக்க...
முந்தி விரித்து நின்றானே – என்
முழுநாள் உழைப்பை முக்கால் விலைபேசி...
விளைச்சலும் வாடிப்போகாம - என்
வயிறும் காஞ்சும் போகாம...
கேட்ட விலைக்கு அள்ளிக்கொடுத்தேன் - இன்று
கேட்க நாதியின்று நிற்கின்றேன்...!

காற்றும் மழையும் நிலமும் - என்
சேதி கேட்டது – எனை
மலடாக்காமல் வளரவைத்தது...
மனிதனும் பிரிவினையும் – எனை
கூறு போட்டது – பொதுவான
இயற்கையைக்கூட தரமறுக்குது...!

நீரை, வேலிவைத்து பேரம் பேசுகின்றனர்
பச்சை நிலத்தின் பசிபோக்க...
காட்டாற்றையும் கட்டிப்போடுகின்றனர்
மனிதத்தின் கருணை வற்றிப்போக...
கடன் தோறும் அள்ளிகொடுக்கின்றனர்
விளைநிலத்தை வீட்டு மனையாக்க...
விளையா விதையில் மாற்றை புகுத்துகின்றனர் – எங்கள்
உழைப்பெல்லாம் விஷமாய் மாற்ற...!

பிச்சைப்பாத்திரம் ஏந்தி நிற்கிறேன் – என்னை
வாழவைக்கும் மண்ணுக்கு உயிர்கொடுங்கள்...
வளர்ச்சி மட்டும் நோக்காதீர்கள் – என்
நிலத்தை வெட்டி கூறுபோடாதீர்கள்...
இயற்கையை என்னைப்போல் நேசியுங்கள்
நிம்மதியாய் எங்களை வாழவிடுங்கள்..
விளைச்சலை மட்டும் பார்க்காதீர்கள் – எங்கள்
வியர்வைக்கும் பதில் சொல்லுங்கள்...
இயற்கைகளை சொந்தம் கொண்டாடாமல்
விவசாய சுதந்திரம் அளியுங்கள்...
விவாசாய நிலங்களை பாதுகாருங்கள்...!
.
.
-ஜோ. பிரிட்டோ ராஜ்

No comments:

Post a Comment

Do U Like This...