Tuesday, February 28, 2017

அரசியலும், கொள்ளிவாய் பிசாசும்... (Stop Hydrocarbon Project in Tamil Nadu 2017)


மீத்தேன் எனும் கொள்ளிவாய் பிசாசு 
பணக்கார பிசாசுக்களால் எரியூட்டப்படுகிறது... 
ஆறாத தீம்புன் எம்மண்ணுக்கு மட்டுமல்ல 
ங்களுக்குள்ளும் தான்...*

ஆழி துயர் வந்தாலும் 
அடுப்பரிசிக்கு கலப்பைதூக்கும் இனம் 
இன்று அடுப்பு கரிக்காக 
ஆதாயம் தேடிப்பார்க்கிறது...*

பருவமழை பெய்யுமா என 
பரிதவித்து நிக்கும்போது 
பொய்த்தமழையால் லாபம் என்று 
பொட்டல்காடாய் மாற்ற பார்க்கிறார்கள்...*

மாடு பூட்டி ஏருவிடுகிறவனுக்கு 
மணி-காட்டி நோட்டம் பார்க்கிறார்கள்... 
மண்மேலே பச்சைதங்கம் விளைந்துகிடக்க 
மன்னுக்குள்ளே புதையலென தோண்டிபார்க்கிறார்கள்...*

வந்தாரை வாழவைப்பது எங்க பூமி 
வாய்க்கரிசி போடபார்க்கிறாய் என்னநியாயம் சாமி 
சேற்றுபுண்ணில் காலம்ஓட்டுவது பொழப்பு சாமி 
சுடுகாட்டில் பணம்பார்ப்பதுதான் வளர்ச்சியா சாமி...* 

எல்லாவற்றிற்கும் போராட்டம்தான் தீர்வெனில் 
எடுத்துவைத்த ஆட்களுக்கு என்ன வேலை... 
8 கோடி மக்கள் இங்கு பதறிநிக்க – நீ 
தேசபற்று நாடகத்தை திரையேற்றுகிறாய்... 
பஞ்சுபறக்கும் தரிசுநிலங்களை விட்டுவிட்டு – ஏன் 
பஞ்சம் தீர்க்கும் கழனிநிலங்களில் கைவைக்கிறாய்...*

வேண்டாவொன்றை அழுத்தி திணிப்பது 
இப்பொழுது ஜனநாயக மரபானது... 
இளைஞர்கள் காலம் இது 
நன்மையெது தீமையெது என 
பிரித்து பார்க்கும் கூட்டமிது... 
வளர்ச்சி என்று நஞ்சைவிதைக்கும் பிசாசுகளை 
தமிழ்நாட்டைவிட்டே விரட்டிஅடிக்க வெகுநாளாகாது...*

-ஜோ. பிரிட்டோ ராஜ்

No comments:

Post a Comment

Do U Like This...