Sunday, February 5, 2017

குடும்ப விழாவும்... நாங்களும்... – Family Day Bahrain 2017





பல மொழிகள் கண்ட நிகழ்ச்சியது
பல்சுவை நிகழ்வுகள் அரங்கேரியது
பதிவுகளை புகைப்படமெடுக்க
சூரியனுக்கும் அனுமதியில்லை
பனிகளால் மூடிவிட்டு
படைத்தவனும் பார்த்து ரசித்தான்...*

தென்றலும் குளிரூட்டியது 
அனல்வாடை காற்றை தவிர்த்தது...
இறைவனுக்கு ஓய்வு கொடுத்து
நிம்மதியாய் தூங்கவைத்தோம்...
ஆர்ப்பரிக்கும் வாத்தியங்கள் எழுப்பிவிடுமென
ஆங்கில வார்த்தை புனைந்து
இருமணிக்கொருமுறை தாலாட்டு பாடிவைத்தோம்...*

வாசலில் பாதுகாப்பு
கலாச்சார வளைகாப்பு
பொழுதுபோக்கின் சாரம்குறையா
உணவகத்தின் மொருமொருப்பு
எண்ணயியலா மக்கள் வெள்ளம்தான்
குடும்பவிழாவின் தனி சிறப்பு...*

மிருதங்கம் இசைமீட்ட
திருமண கோலம் பூண்டது...
மணதம்பதிகள் தோழர்களோடு
கலாச்சார வலம் வந்தது...
அழையா விருந்தாளியாய்
ஔவையும் கட்டபொம்மனும் தரணி வந்தனர்
விவசாய மக்களோடு சேர்ந்து வாழ்த்தி சென்றனர்...*

அத்தனை குளிரிலும்
அசராத குழந்தைகளின் ஆட்டம்...
அசையாது பார்த்த கூட்டம் - சற்று 
வழிவிட்டு நின்றனவே - எங்கள்
கலாச்சாரம் கண்டு வியந்தனவே...*

பன்னாட்டு இசைகளெல்லாம்
படிந்தன தமிழனின் பரதம் கண்டு...
இந்நாட்டு டிஜிட்டல் கண்களெல்லாம்
வியந்தன நங்கைகளின் நடனம் நன்று*

குடும்பங்களை ஒன்றிணைத்து
வட்டிபிரிக்க கூட்டம் வலைவிரித்தது..
200க்கும், 500க்கும் பரிசுகளை காட்டி
நைசாய் காசு கரக்கும் கும்பல்தானது...
நாள்முழுக்க அலைந்தாலும் விற்றாலும்
கொடுத்து கொடுத்து கைகள்தான் சிவந்தாலும்
மனது மட்டும் நிறைவானது
ஆலயத்தின் பணிகளுக்காக உதவும்போது...*

அளந்துவைத்த அறுசுவைகள் ஆயிரமிருக்க
சோதித்து பார்த்தன ஐம்புலன்கள்...
ஜான் பிடி வயிறு இது - எப்படி
எல்லாவற்றையும் சுவைத்துபார்க்க போகிறது...
ஒன்றை மட்டும் சுவைப்போமென
மனது கட்டுபாடு போட்டது...
வாங்கிதின்று கூப்பன்கள் தீரந்துவிட்டன
மனசு மட்டும் நிறையவில்லை
படைத்தவர்களை வாழ்த்தவும் வயதில்லை...*

மிருதங்கத்தில் வாசித்த பறைகண்டு
குளிர் நரம்புகளும் சூடாயின
காதுகள் அமைதியாக இருக்க
கால்கள் மட்டும் வேலையை காமிக்கிறது...
குத்தாட்டம் போட வயதுமில்லை
குளிரைப்போக்க வேறு வழியுமில்லை...*

திட்டம் தீட்டி சேவைகள் செய்தாலும்
திட்டிதீர்க்க மனதிலிடமுண்டு...
ஒத்துழையாமல் ஒதுங்கியவர்களுக்கு
செய்த பலனை கண்ணில் காண
குடுப்பனையில்லையென நினைத்து – மறுநாள்
நிம்மதி பெருமூச்சுவிட தோனுகிறது...*

ஜாதி மதம் பார்க்காத கூட்டமிது
ஆலயத்திற்க்காய் வாரிவழங்கும் வள்ளலிது
கோவில் பக்கம் ஒதுங்காத மக்களாயினும் அதிர்ஷ்ட
பரிசுவிழுந்து அழகுபார்க்கும் இறைவன் கருணையது...*

அள்ளி கொடுத்த உறவுகள்
வாங்கி செல்லும் இதயங்கள்
சேவையுள்ளம் கொண்ட மக்களென
பிரிக்கயியலா நேசமிது – எங்கள்
குடும்பவிழாவை பார்த்தால் புரிகிறது...*

-ஜோ. பிரிட்டோ ராஜ்

No comments:

Post a Comment

Do U Like This...