Wednesday, March 28, 2018

பேச்சுத் துணைகள்...! (Talk to God)

பேச்சுத் துணைகள்...!

அழகிய உரையாடலது
சுவாரஸ்யம் குன்றாமல் நீண்டது...
காதுகளை இடமாற்றியே
அழைப்புகளுடன் அசைபோட்டது...
கதைகளுமில்லை
கவிதையுமில்லை
துணுக்குகளுமில்லை
கிசுகிசுவுமில்லை
நேர அளவுகளின்றி நீண்டது..!

எதிர்காலமோ, நிகழ்காலமோ
சொந்தமோ, சொத்தோ
எதுக்குள்ளும் அடைபடாமல் நீண்டது..!

ஆரம்பமும் தெளிவில்லை
முடிவுரையில் இணக்கமில்லை
தொடரும் எனும் நிலைப்பாட்டில் நீண்டது..!

பதற்றப்பட அவசியமுமில்லை
கோபமாய் உரைக்க தேவையுமில்லை
கொஞ்சியும் வழியவில்லை
கெஞ்சியும் கூத்தாடவில்லை
நகைச்சுவைக்கு பஞ்சமில்லை
நாட்டுநடப்பு பற்றிய கவலையுமில்லை
அதிகாலைத்தொட்டே அமைதியாக நீண்டது..!

காலம் கடந்த உரையாடலது
கண்கள் முன்னே வந்துபோகிறது...
அடுக்கு வார்த்தைகள் கூடலின்றி
அமைதியான உரையாடலது - என்
எண்ணத்தின் ஓட்டத்திற்கேற்ப
நீண்டு கொண்டே போகிறது..!

எண்ணவியலா வார்த்தைகள்
அள்ளவியலா அன்புக்கள்
குறைவில்லா அழைப்புகளில்
எனக்காக நேரம் ஒதுக்கி
பேச்சுத் துணை அமைந்தது
அது யாருமில்லை...!!!
.
.
.
 இறைவனும் நானும் ஆலயத்தில்⛪
உயிர்ப்பு பெருவிழா ஆயத்தத்திற்காக🕊

-ஜோ. பிரிட்டோ ராஜ்

Wednesday, March 14, 2018

விவசாய சுதந்திரம்...! (Independence for Farmers)



விவசாய சுதந்திரம்...!

வீடு வீடா கடனை பெற்று
வித்து வாங்கி உழுது போட்டேன்...
பருவம் பார்த்து விதைத்ததாலோ - நான்
விதைச்ச பலன் விளைஞ்சு நின்னு...!

காற்றுக்கொரு சேதிசொன்னேன் – எனை
கடனாளியாக்காம கடந்துபோ...
மழைக்கொரு சேதி சொன்னேன் – என்
மண்ணை வாடாம பார்த்துக்கோ...
நிலத்துக்கொரு சேதிச்சொன்னேன் - என்
வயிறு காயாம வளர்ந்துக்கோ... - எல்லாம்
ஒன்றாய் பதில் சொன்னது
உனக்காகத்தான் நாங்கள் என்று..!

விட்டகுறை தொட்டகுறையாய்
நல்ல மகசூல் பார்த்து நிக்க...
முந்தி விரித்து நின்றானே – என்
முழுநாள் உழைப்பை முக்கால் விலைபேசி...
விளைச்சலும் வாடிப்போகாம - என்
வயிறும் காஞ்சும் போகாம...
கேட்ட விலைக்கு அள்ளிக்கொடுத்தேன் - இன்று
கேட்க நாதியின்று நிற்கின்றேன்...!

காற்றும் மழையும் நிலமும் - என்
சேதி கேட்டது – எனை
மலடாக்காமல் வளரவைத்தது...
மனிதனும் பிரிவினையும் – எனை
கூறு போட்டது – பொதுவான
இயற்கையைக்கூட தரமறுக்குது...!

நீரை, வேலிவைத்து பேரம் பேசுகின்றனர்
பச்சை நிலத்தின் பசிபோக்க...
காட்டாற்றையும் கட்டிப்போடுகின்றனர்
மனிதத்தின் கருணை வற்றிப்போக...
கடன் தோறும் அள்ளிகொடுக்கின்றனர்
விளைநிலத்தை வீட்டு மனையாக்க...
விளையா விதையில் மாற்றை புகுத்துகின்றனர் – எங்கள்
உழைப்பெல்லாம் விஷமாய் மாற்ற...!

பிச்சைப்பாத்திரம் ஏந்தி நிற்கிறேன் – என்னை
வாழவைக்கும் மண்ணுக்கு உயிர்கொடுங்கள்...
வளர்ச்சி மட்டும் நோக்காதீர்கள் – என்
நிலத்தை வெட்டி கூறுபோடாதீர்கள்...
இயற்கையை என்னைப்போல் நேசியுங்கள்
நிம்மதியாய் எங்களை வாழவிடுங்கள்..
விளைச்சலை மட்டும் பார்க்காதீர்கள் – எங்கள்
வியர்வைக்கும் பதில் சொல்லுங்கள்...
இயற்கைகளை சொந்தம் கொண்டாடாமல்
விவசாய சுதந்திரம் அளியுங்கள்...
விவாசாய நிலங்களை பாதுகாருங்கள்...!
.
.
-ஜோ. பிரிட்டோ ராஜ்

Thursday, March 8, 2018

விவாதங்கள் எனும் இல்லுமினாட்டி (Importance of Social Media Discussions)

விவாதங்கள் எனும் இல்லுமினாட்டி..!!!

காலங்களின் வளர்ச்சி - நம்முள்
பிரிவினையை உறுவாக்குமோ...
உலகநாட்டங்களின் புணர்ச்சி - நம்மை
விரோதியாக மாற்றுமோ...!

வசைபாடும் வலைத்தளங்கள்
தனிமைப்படுத்தும் தொலைதொடர்பு சாதனங்கள்
வாழ்க்கை மனிதனுக்காகவா - இல்லை
இயந்திரத்திற்காகவா...!

தொலைபேசி இல்லாதபோது 
நேரில் உதவுபவன் கடவுளாய் தெரிந்தான்...
பொழுதுபோக்குகள் இல்லாதபோது
உறவின் அன்பு புனிதமாய் இருந்தது - இன்று
யார் கடவுள் என வாக்குவாதமிடுகிறோம்...!

ஜாதியை தெளிவுபடுத்த ஆயிரம் உரையாடல்கள்
மதத்தை தெளிவுபடுத்த ஆயிரம் உரையாடல்கள்
இனத்தை தெளிவுபடுத்த ஆயிரம் உரையாடல்கள்
மொழியை தெளிவுபடுத்த ஆயிரம் உரையாடல்கள்
மனிதத்தை தெளிவுபடுத்த இத்தனை பதிவுகள் வேண்டுமா...!

ஜாதியால் மக்கள் தாழ்த்தப்படுகிறார்கள்
கடவுள் நம்பிக்கையால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்
இனவேற்றுமையால் மக்கள் அழிக்கப்படுகிறார்கள்
மொழி பிரிவினையால் மக்கள் ஒதுக்கப்படுகிறார்கள்...
எத்தனையாயிரம் வலைதள பதிவுகள்
வலுக்கும் உரையாடல்கள் - எங்கே
இவற்றை ஆரம்பித்து வைக்கிறோம்...!

நண்பா நமக்கு என்ன வேண்டும்..
பிறரை அவமானப்படுத்தி ரசிப்பதா - இல்லை
பிறருக்கு ஆபத்தில் உதவுபவனாய் இருப்பதா...
பிறரின் வாழ்வாதாரங்களை பறிப்பதா - இல்லை
அடிமையாக வாழ்பவனை கைதூக்கிவிடுவதா...
பிறரின் உறவுகளை தூக்கி எறிவதா - இல்லை
ஒவ்வொருவருக்கும் அன்பில் வாழ்வதா...
நம் சொல் செயலால் பிறரை நோகடிப்பதா - இல்லை
நல்மனிதத்தை நமக்குள் அறுவடை செய்வதா...
ஒருவருக்கொருவர் பகைவராக வாழ்வதா - இல்லை
தன்னைப்போல் பிறரையும் நேசிப்பதா...!

தன் வார்த்தையாலும் வாழ்வாலும்
எல்லா மதஇனமொழிகளும்
யாரையும் கலங்கப்படுத்துவதில்லை - மாறாக
தன் சொல்லாலும் செயலாலும்
மனிதன் இவற்றை கலங்கப்படுத்துகிறான்...
குறைகள் உலகமெங்கும் நிறைந்துள்ளது - அதன்
நிறைகள் நாம்தானென எப்போது புரிவது..!

வலைத்தளங்களில் இனிமேலும் 
ஜாதிகளினால் சண்டையிடுவதா - இல்லை
தாழந்தவனை உயர்ந்தோனாக்க முயற்சிப்பதா...
மதத்தினால் சண்டையிடுவதா - இல்லை
மதங்களின் நல்போதனைகளை கடைபிடிப்பதா...
இனபாகுபாடால் சண்டையிடுவதா - இல்லை
ஒரேகுலமென தோள்கொடுப்பதா...
மொழி பிரிவினையால் சண்டையிடுவதா - இல்லை
ஒருவருக்கொருவர் சொல்லிகொடுத்து வாழ்வதா...!

வாழ்க்கை மிகப்பெரியது - நாம்
ஒரு குருகிய வட்டத்தில் அடைபட்டுகிடக்கிறோம்...
வலைதள வீண்விவாதங்களை குறையுங்கள் - மாறாக
வாழ்வாதாரத்திற்கான வழியை கற்பியுங்கள்...!

கல்வியின் தரங்களை வினவுங்கள்
கற்றலின் பயனை உரையாடுங்கள்
சிறு தொழில் முயற்சியை பேசுங்கள்
கடனில் மூழ்குவோருக்கு ஆலோசனை அளியுங்கள்
சமூக வளர்ச்சியை கலந்துரையாடுங்கள்
நாட்டின் முன்னேற்றத்தை கண்கானியுங்கள்
மாற்று எரிசக்திபற்றி விவாதியுங்கள்
உண்ணும் உணவிற்கு வழிசொல்லுங்கள்
அரசின் திட்டங்களை கொண்டுசேருங்கள்
ஆதரவற்றோரின் நலன்களை எடுத்துரையுங்கள்
இன்னும் எத்தனை எத்தனையோ
வாழ்வாதார உரையாடல்களிருக்க - நாம்
எதனுள் மூழ்கிக்கிடக்கிறோம்...!

சமூக வலைத்தளங்களில்...
ஜாதி மத இன மொழி உரையாடலை தவிர்த்து
மனிதத்தை வளருங்கள்... - அப்போது
ஜாதிகள் ஒழியும்
மதத்தின் புனிதம் காக்கப்படும்
இனத்தின் தன்மைகள் உணர்த்தப்படும்
மொழிகளின் உணர்வு பிரதிபலிக்கப்படும்..
மனித வாழ்வாதாரங்களை போதியுங்கள் - நம்
உரையாடல்களை நிஜமாக்குங்கள்...!
.
.
- ஜோ. பிரிட்டோ ராஜ்