Sunday, July 2, 2017

என்ன வாழ்க்கையடா இது..! (What Life is This)

முட்களுக்கும் பயப்படாமல் ஓடிய பாதங்கள் - இன்று
கிரானைட்டுக்கு செறுப்பு தேடுகிறது…!

பசியோடு தூங்கிய காலத்தில் அண்டாத நோய்கள் - இன்று
பட்டுமெத்தையில் தூங்கக்கூட வழியில்லாமல் செய்கிறது...!

காலாண்டு அரையாண்டு தேர்வை பத்துதடவை எழுதிய கைகள் - இன்று
கனிப்பொறியில்லாமல் உரையாட நடுங்குகிறது...!

எட்டனாவில் விட்டத்தை பார்த்து ரசித்த காலம் - இன்று
பத்து கோடி பணம் இருந்தும் நேரமில்லாமல் தவிக்குது...!

மொட்டைமாடி தூக்கங்கள் ஏசியை கண்டதில்லை - இன்று
பத்துமாடி ஏசியில் துக்கத்தை காணவில்லை...!

களைப்பு தீர்க்க கஞ்சி உண்டு பசியை உணர்ந்ததில்லை - இன்று
கடைக்கரிசி பலவகை உண்டு திங்கமனமில்லை...!

எட்டி நட என்று தட்டி வளர்த்த பிள்ளைகள் - இன்று
தட்டி உடை என கைப்பேசியில் காலம் போக்குது...!

அளவாய் படித்தவன் அரசனாய் சொந்த நாட்டில் வாழ்கிறான் - இன்று
அதிகம் படித்தவன் வெந்தனலில் வெளிநாட்டில் சாகிறான்...!

பத்து பிள்ளைக்கும் பக்குவம் பார்த்தது - இன்று 
ஒரு பிள்ளைக்கே தலைவிரித்தாடுது…!

இல்லாதபோது கிளிந்த உடைகள் வாங்க வழியில்லை - இன்று
இருக்கின்ற உடைகளோடு கிளித்தவைகள் பார்க்கமனமில்லை...!

காசை தேட கால்கள் ஓடியது - இன்று
காசின் மூலம் கால்கள் ஓடுகிறது...!

குடுகுடுப்பன் சாமம் வந்து குறிசொல்வான் - இன்று
குறிக்காக சாமமில்லாமலே குடுகுடுக்கிறோம்...!

ஓலை வீட்டிலே வானம் எட்டிபார்க்க இடமுண்டு - இன்று
மாடி வீட்டிலே மனிதன் எட்டிப்பார்க்க மனமில்லை...!

உட்கார்ந்து பழகிய கால்கள் நாற்காலி தேடியதில்லை - இன்று
நாற்காலி இல்லாமல் உட்கார மனமில்லை...!

மணி சத்தம் கேட்டாலே கடவுளை நினைத்தகாலம் - இன்று
மாளிகை கட்டி கடவுளை நினைவுபடுத்துகிறது...!

5 ரூபாயில் சேமித்த 1 ரூபாய்தான் - இன்று 
50 ரூபாய் சம்பாதித்தும் மிச்சமில்லாமல் கழிகிறது...!

இருக்கிறதை வைத்து அழகு பார்க்காத பூமி - இன்று
இல்லாததை தேடி அழகாய் நினைக்குது...!

வீட்டில் களவாடிய பணமும் உண்டியலை சேர்ந்தது - இன்று
நாட்டில் உழைத்த பணமும் வங்கியில் சூறையாடுது...!

உடல் அசதியில் தூங்கிய காலம் - இன்று
தூக்கத்திற்காக உடலை அசதியாக்கி கொள்கிறது...!

ஊருக்கு உபதேசம் செய்ய படித்திருக்க அவசியமில்லை - இன்று
பாருக்கு உபதேசம் சொல்ல படைத்தவனுக்கும் அனுமதியில்லை...!

காலங்கள் அழகானது
அவைகளோடு வாழும்போது...
காலத்தை மிஞ்சிய வளர்ச்சி
காலமில்லாமல் அழித்துவிடும்...!

பசி தீர்க்க வழிதேடாமல்
பணம் நிரப்ப பொருள் தேடினால்
மனிதன் மட்டும் மிஞ்சுவான் – அப்பொழுது
ஒரு ஜான் வயிற்றுக்கு
ஓராயிரம் கோடி மக்கள் கையேந்தும் காலம்
வெகுதொலைவில் இருக்காது...!!!



-ஜோ. பிரிட்டோ ராஜ்

No comments:

Post a Comment

Do U Like This...