சோலைவனம் ஒன்று கண்டோம்
பஞ்சமறியா நாடு அது...
வாரி கொடுக்க கைகள்
குறையா
வளம்கொண்ட பூமி அது...
ஆங்கிலேயனும் அண்டையானும்
ஒன்றுசேர்ந்து
உடுக்ககோமணமும்
கொடுக்காமல் வாரி சென்றது...!
மறுபடியும் பிறந்தோமென
மாருதட்டி
எழுந்து நின்றோம்...
சோடைபோன அரசுக்கு தூபம்காட்டி - வாடிப்போய்
பாலை நிலத்தில்
வீழ்ந்தோம்...!
எண்ணவியலா துயரங்கள்
எடுத்து சொல்ல
உறவுமில்லை...
சொல்லயியலா பாரங்கள்
இறக்கி வைக்க
மனமுமில்லை...!
எண்ணிலடங்கா ஆசைகள்
ஆகாச பறவையாய்
பறந்துவந்தோம்...
ஒவ்வொன்றாய்
நிறைவேற்றிசெல்ல
நறைமுடி தறித்து
நடக்கலானோம்...!
ஆளும்வேறு ஆடையும்வேறு
கல்வியும்வேறு
கலாச்சாரமும்வேறு – ஆனாலும்
எல்லை தாண்டிய நட்பிது
எட்டி நிக்க சொல்லாதது...!
எங்கு நோக்கினும் பொட்டல்காடு
காசு சேர்க்கும்
இச்சையோடு..
கானல் நீரின் வாடை தனிலே
தங்க மீன்கள் வாழ்வதைக்
காணீர்...!
கடல் தாண்டிய சிப்பிகள் -
இங்கு
கண்ணீர் வடிப்பதைப்
பாரீர்...
சோற்றுக்குள்ளே சோகங்களை
வைத்து
வயிறு நிறப்புவதைக்
கேளீர்...!
ஆடிக்காற்றுக்கும்
வாடைக்காற்றுக்கும்
அலுத்துக் கொண்ட
மேனியிது... - இன்று
புழுதிக்காற்று புயலாக
மாறியும்
புன்னகைக்கும்
வாழ்க்கையிது...!
எட்டி கூப்பிட நாதியில்லை
ஒற்றை கட்டில்
வாழ்க்கையே...
தட்டிபேசி உறவுகள் கொள்ள
காலமும் கையில்
இல்லையே...!
சோறு கொடுக்கும் பூமி
சொர்க்கமடா
இதை உணரவும்
தைரியமில்லையடா
கிணற்று தவளை வாழ்க்கையடா
சொந்தமில்லா காசும் விசம்தானடா...!
பெற்றவைகள் நாட்டிலிருக்க
சொத்து சொந்தம்
மறந்திருக்க
கரை சேரும் நாளைப்
பார்த்து
வருடங்கள் கழிந்து
செல்லுமடா...!
தூக்கி எறிய தோனும் -
இந்த
முறையே கடைசியென
பேணும்...
வற்றாத நதியுமுண்டோ -
எங்கள்
ஓடமும் கரை
சேறுவதுண்டோ...!
பட்டிக்கும் தொட்டிக்கும் சொகுசுகாட்ட
ஆடையும் அணிகலனும் மினுமினுக்கும் – இங்கு
உழைத்து மேனி கருத்தாலும்
ஊருக்கு காட்ட பளபளக்கும்...!
குளிருக்கும்
வெயிலுக்கும் போட்டியுண்டு
இராவும் பகலும்
வருவதுண்டு...
அண்டி ஒதுங்க இடமுமின்றி –
நாங்கள்
வாடி வதங்கி
போவதுமுண்டு...!
எட்டுதிசைக்கும் சத்தமாய்
உரைப்போம்
எங்கள் பாலைவன
வாழ்க்கைதனை...
நாட்டில்
நஞ்சை புஞ்சை வம்சங்கள்
காண
தலைமுறையை தானம் செய்து
வியர்வைத்துளியில்
வளர்ந்துவரும்
பாலைவனப்பூக்கள் நாங்கள்
என்று...!!!
- ஜோ. பிரிட்டோ ராஜ்
No comments:
Post a Comment
Do U Like This...