Thursday, January 26, 2017

Tamil Wish - Republic day 2017

வங்கம், அரபியம் போதித்தவைகளை
இந்தியமும், இமயமும் கட்டிகாக்குமடா - ஏட்டில்
ஆயிரம் மொழிகண்ட கோர்வைகளை
சேர்த்திங்கு பண்பறிய பேசுமடா...!

சாயம்பூசா அழகிகளை காவர்ந்திழுக்க
சீமைதாண்டி கழுகுகள் பார்க்குமடா - நீரில்
பரிசலுக்கு துடுப்பாகும் இளங்காளைகளை
காட்டாறும் கடந்துசெல்ல அஞ்சுமடா...!

வடதென் தூர அளவினிலே
கால்மிதியா கலாச்சாரம் ஏதடா - பாரினில்
கோடி முகங்கள் கண்ட தேசத்தில்
வாழ்வதே இப்பிறப்பின் சொர்க்கமடா...!!!

Happy Republic day 2017🇮🇳
🇮🇳One Nation & One People👨‍👩‍👧‍👦

-Britto Raj  J..*

Sunday, January 22, 2017

எழுவோம் நமக்காக நாளைய தலைமுறைக்காக (Tamil Nadu Youth Raise)



எழுவோம் நமக்காக...
நாளைய தலைமுறைக்காக...!!!

விவசாயி செத்தாலென்ன
விவாசாயம் அழிந்தாலென்ன - நான்
என்ன இலவசமாகவா சோறு சாப்பிடுகிறேன்..!

ஜல்லிக்கட்டு நடந்தாலென்ன
மாடுகள் இனம் அழிந்தாலென்ன - நான்
என்ன இலவசமாகவா பால் குடிக்கிறேன்..!

கூடங்குளம் திறந்தாலென்ன
அனுக்கதிர்வீச்சில் செத்தாலென்ன - நான்
என்ன இலவசமாகவா மின்சாரம் பெருகிறேன்..!

மணல் கொள்ளை நடந்தாலென்ன
ஆறுகள் அழிந்து போனாலென்ன - நான்
என்ன இலவசமாகவா வீடு கட்டுகிறேன்..!

லஞ்சம் வாங்கினாலென்ன
நாடு முன்னேறாவிட்டாலென்ன - நான்
என்ன இலவசமாகவா தொழிலைசெய்கிறேன்..!

கல்வி வியாபாரமானாலென்ன
படித்தும் வேலை கிடைக்காவிட்டாலென்ன - நான்
என்ன இலவசமாகவா பள்ளி நடத்துகிறேன்..!

காவிரியில் நீர் வந்தாலென்ன
சாகுபடி கருகி போனாலென்ன - நான்
என்ன இலவசமாகவா உணவைபெறுகிறேன்..!

மதுக்கடைகள் திறந்தாலென்ன
மக்கள் குடியினால் செத்தாலென்ன - நான்
என்ன இலவசமாகவா வாங்கி குடிக்கிறேன்..!

எல்லாம் விலைக்கு எளிதாக
சந்தைகளில் கிடைப்பதால் என்னவோ...
விவசாயத்திற்காக தூக்கிலிடும் விவசாயிகள்
ஜல்லிக்கட்டின்றி அழியும் மாட்டினங்கள்
அனுக்கதிர்வீச்சின் அபாயத்தில் வாழ்பவர்கள்
மணலில்லாமல் அழியும் ஆறுகள்
லஞ்சத்தால் முன்னேறா கிராமங்கள்
கல்விக்காக கையேந்தும் தலைமுறைகள்
நீரின்றி கருகும் பயிர்கள்
குடியினால் அழியும் குடும்பங்கள் - இன்று
உங்களுக்கு தேவைப்படாமல் போகலாம்..!

இப்பொழுது...
உட்கார்ந்து தின்று சட்டம் போடுகிற நீங்கள் - நாளை
உழைத்து திங்க வீதிக்கு வரும்போது - இந்த
தமிழினமே சுடுகாடாய் மாறியிருக்கும்..
சோலைவனத்தை பாலைவனமாக்கிவிட்டு
கையேந்தி நிற்ப்பீர்கள் - இன்று
சட்டம்போட கைகூலி கொடுத்தவனைப்பார்த்து..***

-ஜோ. பிரிட்டோ ராஜ்

Sunday, January 15, 2017

ஜல்லிக்கட்டும்... தமிழின அடக்குமுறைகளும்... (Cultural Oppression)



கஞ்சி ஊத்த அரிசி இல்லை
அடுப்படிகள் காய்கிறது...
மொண்டு குடிக்க நீருமில்லை
வானம் பல்லை இளிக்கிறது...
ஒரேநாடு ஒரேமக்கள்
பேச்சு மட்டும் இனிக்கிறது...
எல்லைகள் தாண்டி உதவிகேட்டால்
நீதி கைகொட்டி சிரிக்கிறது...*

பன்றிக்கறியும், மாட்டுக்கறியும் தான்
இன்று தேசப்பற்று பேச்சு...
சகிப்பின்மையும், சண்டையும் தான்
வெளிநாட்டில் வாழ தகுதியாச்சு...
சமத்துவங்கள் வேண்டுமென்று சுதந்திரபேச்சு
எனது கலாச்சாரம் அழிகிறது, நீதியும்போச்சு
தெருவில் வந்துபோராடி நாள்பகல் ஆச்சு
கிடைத்த அடிதான் மிச்சம் மானமும்போச்சு...*

நாட்டின்...
பொருளாதார முன்னேற்றம் வேண்டும்
சேர்ந்து குரல்கொடுத்தோம்... - எங்கள்
காலாச்சார பாதுகாப்பு வேண்டும்
ஏனோ தனிமைபடுத்தபட்டோம்...*

பேசும் மொழிகள் பலவாயினும்
ஒரேநாடு என வாழ்ந்து வருகிறோம்...
நாம் கத்தும் கதறல் புரியாத
காதுகள் இருந்தால் எங்கு
சென்று பிரச்சனைகளை முறையிடுவோம்...*

ஊருக்கொரு நீதியென்று கையேந்தவில்லை
நான் சாப்பிடும் இட்டிலிக்குள்
சப்பாத்தியை திணிக்கிறாய்
ஏன் என்று புரியவில்லை...*

மாநில எல்லை தாண்ட முடிவதில்லை
நாங்கள் என்ன தனிநாடா விளங்கவில்லை
நம்மை மதிக்கிறார்களா, நேசிக்கிறார்களா தெரியவில்லை
நமது ஊடகங்களும் மொழிபெயர்ப்பு செய்வதுமில்லை
ஆண்டபரம்பரை என்பதில் அர்த்தமில்லை நாம்
ஓன்றுசேராமல் இதற்க்கு என்றும் முடிவுமில்லை...*

-ஜோ. பிரிட்டோ ராஜ்

Sunday, January 8, 2017

இரவு பாதயாத்திரை, பக்ரைன் (Church to Home)

இரவு நேரத்தில்
கடும் குளிரில்
நானும் - என்
தொலைபேசியின் இதமான ராகமும்
ஒன்றாக பயணிக்கிறோம்...!


வாயும் முனுமனுக்கிறது
கையும் விரல்வித்தை காட்டுகிறது - ஏதோ
இசையிலே பிறந்து வளர்ந்தவன் போல...
பார்ப்பவர்கள் பைத்தியம் என்பார்களோ
இசை மேதை என்பார்களோ தெரியாது - ஆனால்
ஏதோ தனிமையை மிஞ்சிய இதம்
மனதை வருடுகிறது...!

என் பாட்டிற்கு இசையமைக்க
ரீங்கரிக்கும் வண்டுகள் இல்லை..
எனக்காக ஆடிப்பாட
மின்மினி பூச்சிகள் இல்லை...
இரவை கடிந்து கொண்டேன் - நீ
எனது ஊரை போன்றில்லை என்று...!
ஆனாலும்...
இங்குள்ள இரவுகள் - என்
மனநிலையை அறிந்துகொள்கிறது...
எப்பொழுதும் என்னை அமைதியாக வரவேற்கிறது...
ஒருவேளை என் செருப்பு சத்தங்கள்
புரிய வைக்குமோ... என்னவோ...!

எதிரே வேகம் குறைக்காமல் செல்லும் வாகனமும்
முன்னே குழந்தைகளோடு குதுகலிக்கும் குடும்பமும் - எனது
பொறாமையை சீண்டி பார்க்கின்றன...
என் நிழல் சமாதானப்படுத்தியது
அவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்காதென்று...!

நெடுதூர நடை பயணமில்லை
வீட்டிற்கும் கோவிலுக்கும்
பத்து நிமிடங்கள் தான் - ஆனால் தினமும்
நிறைய பாடங்கள் கற்றுதருகிறது...
இன்றைய கவிதையைப் போல...***


-ஜோ. பிரிட்டோ ராஜ்