Wednesday, March 20, 2019

ஓய்ந்திடு அலையே (Rest of Sea Waves)





ஓய்ந்திடு அலையே...!

இயந்திர வாழ்க்கையிது
ஓய்வுக்கு ஒருநாளெடுத்து சக்கரம்போல் சுழல்கிறது
இதற்க்காயா பிறந்தாய் என ஓலமிட்டே
காலமும் ஓடுகிறது..!

உணவு கொடுத்து திறம்பட வளர்த்து வெட்டப்படும்
கோழி, ஆடு, மாடு போல் தான் மனிதனும்...
மானிடனாய் பிறக்க மாதவம் செய்யவேண்டும்
இன்று மானிடனாய் வாழ மாதாமாதம்
கைகட்டி வேலை செய்யவேண்டும்..!

அதிகம் படித்தலே ஆகச் சிறந்தது
கடின உழைப்பே உயர்வின் பலன்
கார்ப்பரேட் ஆகிப்போன உலகத்தில் – இது
யாருக்காக எழுதிவைத்த பொன்மொழிகள்..!

அள்ளித்தந்த இயற்கையை அடுப்புக்கரி ஆக்கிவிட்டு
அடுப்புக்கரி தயாரிப்பதை பாடமாக படிக்கிறோம்..
மனித பேராசையில் நிலங்களை வளைத்துப்போட்டு
மனிதனையே அங்கு உரமாக மாற்றுகிறோம்..!

நாட்டினை காக்க ஒரு கூட்டம்
இன மத மொழியைக் காக்க ஒருகூட்டம்...
அன்றாட உணவுக்கு அனுதினம் ஓடும் ஒருகூட்டம்
அடுத்தவேளை உணவின்றி கையேந்தும் மறுகூட்டம்
என்ன வாழ்க்கை இது என கேட்குமுன்
எதற்கிந்த மனித பிறப்பு என கேட்க தோனுகிறது..!

இயற்கையின் பெருக்கம் அழிவை தருவதில்லை
செயற்கையின் பெருக்கம் நிறைவை தருவதில்லை
மனித பெருக்கம் நிம்மதியாய் வாழ விடுவதில்லை
ஒருநாள் வரும் – அன்று
ஊணும் அழிந்து
உலகமும் அழிந்து
கடைசி மனிதனின் சத்தம் கேட்க்கும்போதாவது
ஓய்ந்திடு அலையே
ஒருவருக்கும் அடிமையாய் நிம்மதியின்றி வாழாமல்..!
.
.
- ஜோ. பிரிட்டோ கிளாரா

Thursday, March 14, 2019

முகநூலும் இருமுகங்களும் (Facebook Faces)







முகநூலும் இருமுகங்களும்..!

ஒருமுகம்...

அது நல்லதை பாராட்டும் 
அது நட்பாய் பழகும் 
அது மறவாமல் வாழ்த்துக்கள் கூறும் 
அது துன்பத்தில் ஆறுதல் படுத்தும் 
அது இனிய நிகழ்வுகளை விளம்பரப்படுத்தும் 
அது பொதுநிலையை ஊக்குவிக்கும் 
அது அனைவரையும் ஒன்றுபடுத்தும் 
அது இடர்களில் கைகொடுக்கும் 
அது நல்லது செய்ய தூண்டும் 
அது வாழ்வுக்கு வழிகாட்டும்...

மறுமுகம்...

அது தன்னிலை மறக்க வைக்கும் 
அது கோபத்தை வெளிபடுத்தும் 
அது காலமறிந்து பிரிவினை பேசும் 
அது கலவரத்தை தூண்டும் 
அது நஞ்சை விதைக்கும் 
அது கெட்டதை பரப்பும் 
அது ஒற்றுமையைக் கெடுக்கும் 
அது தீயவனவற்றை பழகச் செய்யும் 
அது ஆபாசத்தை ஊக்குவிக்கும் 
அது தவறானபாதைக்கு அழைக்கும் 
அது நிம்மதியை குலைக்கும் 
அது நம்மை மறைத்து வைக்கும் 
அது நம்மை தனிமைபடுத்தும் 
அது நம்மை ஆக்கிரமிக்க பார்க்கும்...

எதை நீ அணிந்து 
முகநூலில் பயணிக்கிறாயோ – அதன்படி 
நம் வாழ்வும் செயலும் அமையும்... 
இங்கே 
இரட்டை முகமூடி அணிபவர்களும் உண்டு 
அதை உணர்ந்து பழகினால் நன்று... 
முகநூலுக்கு அடிமையாகாதே - யாரும்
உன்னை அடிமைபடுத்தவும் விடாதே... 
தெரியாத முகத்தின் பிடியில் சிக்காதே 
வாழ்க்கை உன் கையில் என்பதையும் மறக்காதே...! 
. 
.  
ஜோ. பிரிட்டோ ராஜ் கிளாரா