Monday, July 24, 2017

புறம்போக்கு மனிதர்கள் (A Village Mother Story in Tamil)



புறம்போக்கு மனிதர்கள் - ஒரு தாயின் கதை

பட்டாமனையை விற்று
பவுனு பத்து செஞ்சுபோட்டு
பரிசல் பணம் இல்லையான்னு
அரசல் புரசல் காதுகடிக்க...
புது நெல்லு நாத்து நட்ட
விளை வயலை எழுதி வச்சா…!

பத்து ரூபா காசுக்கு
வக்கனையா பேசிய வாய்களால்...
எட்டனா வழியில்லா ஆடவனுக்கு
அரசியானா எங்கள் குல மகாராணி...
குடி உண்டு குடும்பம் மூணு
ஜனத்தொகையை பெறுக்கிவிட...
விதை நெல்லும் இரையாச்சு
வீதி நோய்க்கு மருந்தாச்சு...!

சட்டி நிறைய குழம்பு வைக்க
ஞாயிறு மட்டும் வந்துபோக
தின்றதெல்லாம் நினைத்து பார்க்க
மீதி ஆறு நாட்கள் தவமிருக்கு...
வனாந்தரந்தான் விரிந்து கிடக்க
வேலிபோட்டு கட்டி வைத்தே
எந்தன் நாள் மட்டும் சுருங்கிபோக
கஞ்சிக்கிரையாய் மாறிப்போனேன்...!

பெத்தது வளர்ந்து நிற்க
படிக்க நாலு இடம் தேடி
சுருக்கு பையில் கனம் இல்லை
அரசுபள்ளியைதவிர வேறுவழியில்லை...
வளைந்து கொடுக்க முதுகு உண்டு
வேதாளம் போல செலவும் உண்டு
நல்ல பொழுது எங்கு என
ஓடி ஓடி களைத்த நெஞ்சம்
அசதிக்கு தூங்ககூட
வழியில்லா ஜென்மமானேன்...!

நோயும் சோக்காடும் நாடிவர
சேர்த்து வைத்ததும் பேரம்போனது
சீர்வரிசை கழுத்தை அண்டா
வட்டிக்கடையில் குடிபுகுந்தது...
வாழ கூட வழியில்லா
கரையில்லா உள்ளம்போல
கைக்காசு கரைஞ்சுபோச்சு
புறம்போக்கே சொந்தமாச்சு...
சுத்தி கட்ட வழியுமில்ல
வளைத்துபோட சொந்தமுமில்ல
குளக்கரை பூக்கள் நாங்கள்
மூழ்காமல் வாழ்ந்து வருகிறோம்...!

குடிக்கு பத்து
குடிசைக்கு பத்து
பிரித்துகொடுக்கும் ஆடவனைப் பார்த்து...
கூரைகுள்ளே குடும்பம் வாழ
பட்டாமனையும் பரிகாசம் செய்தது...
ஆடி மழை தேடிவந்து
கூரை நாரை நனைத்துபோக
கட்டிய ஓலையும் இத்து போகும்...
ஒட்டு போட உறவுகள் தேடி
தினம் ஒரு மேனியாய் – அவர்
வாசல்முன்னே கோலம்போட்டேன்...
புறங்கையை மூஞ்சியில் காட்ட
மாதங்கள் கழிந்து சென்றது
கூரையும் வானம் பார்த்தது...!

சொத்துபத்து எல்லாம் தூரம் நிற்க
படித்த மகவை தலைநிமிர்ந்தது
அப்பனும் ஆத்தாளும் பட்டவேதனைக்கு
மருந்துபோட நாளும் வந்தது...
சொந்த பூமி கனவுகண்டு
உள்ளதையெல்லாம் வித்தாச்சு
பட்டா நாளை பார்க்கபோகிறோம் – என்ற
பரிகாசம் கண்முன் வந்துபோனது...!

எட்டி நின்று சிரித்தவாய்கள் - நாளை
தரைபார்த்து நடந்து செல்லுமே
புறம்போக்கு மனிதன் நான்
புது மனிதன் ஆவேனே...
என் உழைப்பில் சாரமில்லை
வாயிக்கும் வயிற்றுக்கும் சரியானது..
பிள்ளை சேர்த்த பணமிது
பார்த்து பார்த்து இடம் அமைந்தது...!

வீடு கட்ட கடன் ஏந்தி
வங்கி கதவை தட்டி நின்றேன்
கைக்கூலிக்கு கடன் வருமோ – என
பையனின் பேரில் நிலம் எழுத
பணமும் வந்தது பங்களாவும் உயர்ந்தது...
கூடு கும்பிடுபோட்டு குடித்தாலும்
குடியைகாத்த நல்லவன் என்னவன்
பாதை மாறி பயணித்தாலும் – எங்கள்மேல்
பாசம் வைக்க தவறியதில்லை
கூடாகுடியால் நாடிநரம்பும் அடங்க
பனை மரம் போல் சாய்ந்தான்
கொலையே நடுங்கிபோச்சு
என் நாதியும் விட்டுபோச்சு...!

கட்டியவன் போனபின்
ஒட்டியவனுக்கு வரம் தேடினேன்...
புறம்போக்குகாரி என்று சொல்லியே
வந்த வரன்கள் விலகி செல்ல...
பட்டா நிலத்தைக்காட்டி
பணயம் வைத்து கட்டிவைத்தேன்...
விட்டகுறை தொட்டகுறையாக
உறவுகளும் சேர்ந்துகொள்ள...
அடுப்படியும், நடுவீடும் தவிர – எனக்கு
தலைசாய்க்க தனி இடமில்லை...!

அழுக்கு மேனியும் கந்தல் உடையும்
பகட்டு சொந்தங்களுக்கு
உறுத்தலாய் இருக்க...
ஒதுக்குவதற்கான வழிதேடி
குமுறல்களை கொட்டித்தீர்த்தான்...
எதிர்த்து பேச மனமுண்டோ
ஒற்றைபிள்ளை கண் எதிரே...!

சாணி மொழுகிய தரைகள்
சருக்கிவிடவில்லை...
மொசைக் தரைகள் – என்னை
வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை...
நாடுன்றோ என்
உடலை தாங்கிக்கொள்ள...
வீதியுண்டோ என்
நாளை கடத்திசெல்ல...!

கண்ணீர்தான் வத்திப்போச்சோ
மனம் மறுத்து போயுள்ளது...
புறம்போக்குதான் உறவுயென்று
கால்கள் நகர்ந்து செல்கிறது...
குளக்கரை வீடினிலே – என்
நெஞ்சுரத்தை நாட்டியெழுப்பினேன்
வீழ்ந்துபோகவில்லை – இந்த
கட்டையும் சாயவில்லை...
புது துணிகள் நாலு உண்டு
கரை வேட்டி இரண்டு உண்டு
வாரி நெஞ்சில் வைத்துகொண்டு – எனது
வீடு நோக்கி நடந்தேன்...!

ஒன்று இரண்டு மூன்று என
மாதங்கள் தவறி ஓடியது
மகனும் வெளிநாடு பறந்துவிட்டான்
என்னையும் தவிக்கவிட்டுவிட்டான்...
தளர்ந்த உடல் என்னசெய்ய
பாட்ட ஓலையை முனையலானேன்
என்னை தேடி வருபவர்களிடம்
பிரம்மைபிடித்து பிதற்றலானேன்...!

இரவு தூங்க நேரமானது
கண்களும் ஏனோ மூடமறுத்தது...
மகனின் அழைப்பு எட்டவில்லை
எனக்கும் வேருவழியுமில்லை...
மஞ்சள் கடிதம் வந்துவிட்டது
வீட்டை காலிசெய்ய வேண்டுமென்று...
பட்டாமனை உள்ளதென்று – இலவசமாய்
வரும் நிலமும் கிடைக்காமல்போக...
ஒருவார அவகாசமிருக்க – நான்
எப்படி கோடீஸ்வரியாவேன்..
பெற்ற மகனோ தூரத்திலிருக்க
துணையும் தேடி எங்குசெல்வேன்...

அன்று
மண்களால் கட்டிய சுவரு அது
புது ஓலைக் குடில் புனைந்து
கூடிவாழ்ந்த தருணமது...
குடியோடு குழையும் கணவனவன்
கபடமின்றி சுற்றித்திரிவான்...
சுட்டியான என் மகனோ
விளக்குத்தண்டால் கோலம்போடுவான்...!

இன்று
அடுப்பெரிய சொந்தங்கள் இல்லை
விற்றுதிங்க சொத்துபத்துமில்லை
கழனியெல்லாம் காடாக்கி
பருவம் பல பார்த்தாச்சு
பறித்து திங்க பழமென்று
எனக்கேதுமில்லையே – இங்கு
சேர்த்துவைத்த உயிர் மட்டும்
யாருக்காக வாழ்கிறது...!

இல்லாத பாரங்களை
தாங்கிகொண்டு உயிர்வாழ – நான்
என்ன கையாலாகாதவளா...
தரையை தடவி தின்றபோதும்
வயிறைக் காய விட்டதில்லை – இந்த
குருவிக் கூட்டை கலைத்தபின் – அதை
நினைத்து வாழ மனமுமில்லை...
கூடுவிட்டு கூடு தாண்டினாள்
பூமிக்கு பாரமாகாமல்...

புறம்போக்குகாரியிவள்
ஒதுங்க நிழல் கொடா – இந்த
பட்டா பூமியிலே...!!!!

-ஜோ. பிரிட்டோ ராஜ்