Monday, December 18, 2017

இயேசுவின் இரண்டாம் வருகையும், இரண்டாயிரம் ஆண்டு எதிர்பார்ப்பும் (Second coming of GOD)



இயேசுவின் இரண்டாம் வருகையும்...! 
இரண்டாயிரம் ஆண்டு எதிர்பார்ப்பும்...!

திங்களில் விழித்தெழ
செவ்வாயில் சோம்பல் நீக்கினான்... 
புதனோடு செயல் துவக்க
வியாழனில் தன்னை தயார்படுத்தினான்...
வெள்ளியில் ஏற்ப்பட்ட உடல் வேதனையில்
சனியில் கிடைத்தது போதுமென சோர்வுற்றான்..
ஞாயிறில் கிடைத்ததை உண்டுகுடித்து ஏப்பமிட்டான் – மீண்டும்
திங்களில் விழித்தெழ...
எத்தனை வருடங்கள் இவ்வாறு கடக்கின்றன
அனுதின அலுப்போடு...
ஆண்டவனுக்கும் இதுதான் தேவையோ - என
செபஸ்தியானும் தன்னையே கேட்டுக்கொண்டான்...!

எலிகள் இரண்டு அங்கும் இங்கும் ஓட...
கூரை ஓட்டையை வேவுபார்த்தவன்போல்
மல்லாக்க படுத்து விட்டத்தை முறைத்தான்...
மனதில் எழுந்த சோம்பலோடு
வேலைக்கு விடுப்புகொடுத்து புத்திக்கு வேலைகொடுத்தான்...!

கிறிஸ்மஸ் தாத்தா இன்று வருவார்
கதவை பூட்டிக்கொள்வோம்...
பிறக்காத ஒருவருக்கு மணிமகுடம் சூட்டி
காசு பார்க்கின்றன இந்த ஈனப்பிறவிகள்...
என்னைப்போல் வியர்வை நாற்றம் எழ
காசை தேடி அலைபவன்... - இவர்களின்
இரண்டாம் வருகை கதையை நம்புவேனோ...!

வெறும் கட்டுக்கதைகளை திணித்து
நயமாக என்னை நம்பவைக்கிறார்கள்...
வெட்டி போதனைகளா பேசி – என்
பலவீனம் பார்த்து ஏமாற்றுகிறார்கள்...!

யார்தான் நம்புவார்கள்
கடவுள் பிறந்தது மாட்டுத்தொழுவமென்று...
யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்
மனிதன் கடவுளை கொன்றானென்று...!

அறிவில்லா மந்தை கூட்டத்தை
ஒருவன் மட்டும் மேய்த்தானாம்...
தவறிப்போன ஆடுகளை
தேடிபிடித்து அரவனைத்தானாம்...!

எல்லாம் வழிவழியாய் வந்த புரளிகளா - இல்லை
இவர்கள் பொழுதுபோக தயாரித்த நாடகங்களா...
அருமையாக வடிவமைத்துள்ளனர் 
ஆதிமுதல் அந்தம் வரை...
தொடரும் என போட்டுவிட்டு
இரண்டாயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டது...
கதாசிரியரும் கதாநாயகனும்தான் இன்னும் அமையவில்லை...!
வெறுப்புடன் பேசியவாறே – செபஸ்தியான்
மன்குவளை நீரெடுத்து
சூடேறிய உடம்பை குளிர்வித்து
விட்டம் நோக்கி கண்களை உயர்த்தினான்...!

நான் அதை முடிவுக்கு கொண்டுவருகிறேன்
கடவுள் என யாரும் இல்லையென்று...
என் வாழ்க்கையை நானே வாழ்கிறேன்
மனிதன் மட்டும்தான் நிஜமென்று...
முகத்தில் ஒரு நக்கல் புன்னகை வந்தது...!

கிரீக் கிரீக் என சத்தமிட்ட எலிகளை - அடக்கி
வைத்த கெட்டவார்த்தைகளால் கொட்டித்தீர்த்தான்...
ஒருநாள் நிம்மதியா தூங்கவிடுகிறதா – என
முனுமுனுத்துக்கொண்டே...
பானை வாயிற்று பசிக்கு அணைபோட
கஞ்சிகலயத்தில் வாய்வைத்தான்...
என்னா புளிப்பு...
ஊறுகாய்க்கு ஊர்வாய்களை பார்க்கணுமா – என
வெங்காயம் நாலை உடைத்து
வழிக்காதா தாடிகள் நனைய
முழங்கைவரை வழியவிட்டு குடித்துமுடித்தான்...!

நாட்டிலும் நிம்மதியில்லை
வீட்டிலும் நிம்மதியில்லை – என
சணல் கயிறு கட்டிலை தூக்கிக்கொண்டு
வெளிமுற்ற மரத்தடியில் காற்றாட
கால்மேல் கால்போட்டு
கற்பனைக்கு இடம் கொடுத்தான்...!

நம்பிக்கை இழந்துவிட்டேனோ - இல்லை
பிறர் பேச்சுக்கு அடிமையாகிவிட்டேனோ...
எது நிஜம்... எது பொய் - என
எப்படி உணர்ந்துகொள்வேன்...!

அழுதுகொண்டே பிறக்கின்றேன்
எவரின் தயவின்றி நடக்கின்றேன்
அறியா மனிதர் நடுவே வாழ்கின்றேன்..
யாருக்கும் பாரமின்றி போய்ச்சேர்கின்றேன்...
இதில் எங்கிருந்து வந்தது கடவுளும் மதங்களும்...!

கண்களை மூடுவோம் - ஓய்வுநாளில்
புத்திமான் ஆகவேண்டாம் – என நினைத்தவனுக்கு
எண்ணங்கள் வேறுபாதையை நோக்கின...
நடைபாதை பேச்சுகள் எரிச்சலூட்டுகிறது
நாய்கள் குறைக்கிறது
குருவிகள் ஓலமிடுகிறது
செடி பூச்சிகள் கத்துகிறது...
கண்களை மூடிய எனக்கு
காதுகளை மூடமுடியவில்லையே இறைவா – என
கத்தி சத்தமிட்டான் செபஸ்தியான்...!

திடீரென ஒரு ஞானோதயம்.. – ஆமா
இந்த சத்தமும் அமைதியும்
எங்கிருந்து வந்தது... யார் தந்தது...
இந்த இன்பமும் துண்பமும்
எங்கிருந்து வந்தது... யார் தந்தது...
இந்த கழிப்பும் கண்ணீரும்
எங்கிருந்து வந்தது... யார் தந்தது...
இந்த சுயபுத்தியும் முரண்பாடும்
எங்கிருந்து வந்தது... யார் தந்தது...!

கன்னியும் கருவுற்றதாய் கூறினார்களே
அதுவும் எவ்வாறு நடந்தது...
மாட்டுத்தொழுவமுதில் கடும்குளிரை
எவ்வாறு குழந்தை தாங்கிக்கொண்டது...!

அடி அடியாய் எடுத்து வைத்து
வாழ்நாள் முழுவதும் நடந்தாலும்...
உலகை சுற்றிவர முடியுமா...
இராண்டாயிரம் ஆண்டிற்கு முந்திய நிகழ்வு
பூமியை சுற்றியது எவ்வாறு...!

தலை கிர்ரென்றது செபஸ்தியானுக்கு
ஒருவேளை கடவுள் இருப்பது உண்மையோ..
அப்படியே இருந்தாலும்
கடவுள் மனிதன் கையால் சாவாரா
மனிதனுக்காக தான் கடவுளும் மரிப்பாரா..
நம்புகிற மாதிரியா உள்ளது - என
அலுத்துக்கொண்ட செபஸ்தியானுக்கு
உச்சியில் உரைத்தது...    
கட்டுக்கதைகள் பொய்யாக்க
எத்தனைக் காதுகள் வேண்டும்...
இவரை கல்வாரியில் அறைந்த செய்தி
ஊரெங்கும் ஒலிக்கிறதே...!

ஆண்டவனாய் சொல்லி அரசாண்டவர்கள்
மாண்டுபோனாரே...
இங்கு ஆண்டியாய் வந்தவர்
மக்களினுள் அரச வாழ்க்கை வாழ்கிறாரே - எப்படியென
தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்...!

யோசேப்பும், மேரியும் சுமந்தார்களே பத்துமாதம்
அவப்பெயர்களை தாங்கிக்கொண்டு... - உலகமே
ஆராதிப்பவன் தேர்ந்தெடுத்ததா மாட்டுத்தொழுவம்...
அன்று தலை சாய்க்க இடம்கொடா பூமி – இன்று
தலைக்குமேல் வைத்து கொண்டாடுகிறதே...!

என் தாயும் ஆடுகளை மேய்க்கிறாள்
அவையும் அவளை நாடுகின்றன..
உண்ணாதபோது எழுப்பும் சத்தங்கள்
அவளைக் கண்டதும் துள்ளிக்குதிக்கின்றனவே...
இங்கே யார் மேய்ப்பன்... யார் ஆடுகள்...!

தினம் கடுமையான வேலைகள்
என் வாழ்வை அலுப்பூட்டுகின்றன
ஊதியம் கண்டதும் அவைகள் நீங்கிபோகின்றன
இங்கே யார் முதலாளி... யார் தொழிலாளி...!

ஒன்றும் புரியாமல் எழுந்துவிட்டான்... 
சில்லென காற்று உரசி சென்றது
கூ என கூவும் குயிலின் ஓசை கேட்டது...
காற்றின் வேகத்திற்கும்
குயிலின் ராகத்திற்கும் ஏற்றாற்போல்
மரங்களும் இலைகளை அசைத்து நடனமாடின... 
மெலிதான புன்னகையோடு செபஸ்தியானும் ஜதி சேர்த்தான்..!

கடவுளும் இவ்வாறுதான் பூமியை ரசிக்கிறாரோ
என் வாழ்க்கையின் நிலைமைகளை பார்த்து... - நான்
சோர்ந்துபோகையில் இதைப்போல் புத்துணர்வாக்குகிறாரோ
என்னோடு சேர்ந்து வாழ்ந்து...!

மண்ணும் மனிதனும் தான் பணத்தால்
தரம்பிரிக்கப்படுகிறார்கள்... – ஆனால்
விண்ணும் விடையும் நம் மனத்தால்
தரம்பிரிக்கப்படுகின்றன...
என புனிதன்போல் யோசிக்க ஆரம்பித்தான்..
ஒருவேளை இதுதான் இரண்டாம் வருகையோ...!

சஞ்சலப்பட்ட மனது இப்போது நிறைவாய் உள்ளதே
விகோரமாய் முன்பு கேட்ட குரல்கள் இப்போது
சங்கீதமாய் விழுகிறதே...
புத்தனுக்கு இரண்டாம் வருகை ஆலமரத்தடியில்
எனக்கு வெளிமுற்றத்தில் நிகழ்ந்துள்ளதே... – என
தனக்குள் குதுகலித்துக்கொண்டான்...!

மனித பார்வைகளையும் எண்ணங்களையும் மாற்றும்போது
அங்கே இறைவனின் இரண்டாம் வருகை துளிர்விடுகிறது...
இறைவனும் வந்ததும் அவ்வாறே
நம்மோடு வாழ்ந்ததும் அவ்வாறே – எனவே
ஆயத்தப்படுவோம் அமைதிக்காக...
இரண்டாயிரம் ஆண்டு எதிர்பார்ப்புகளுடன் கூடிய
நம் உள்ளங்களில்...
இறைவனின் இரண்டாம் வருகைக்காக...!

செபஸ்தியானின் மனம் அக்களித்தது
கயிறு கட்டிலை தூக்கி அக்கிளில் வைத்துக்கொண்டு
வீட்டிற்குள்ளே எட்டிப்பார்த்தான்...
எலிகள் இரண்டும் சிந்திய காஞ்சியில் வாய்வைத்தன...
எடுத்தான் கட்டையை போட்டான் ஒரு அடியை
இரண்டும் தலைதெறிக்க ஓடின..
செவிகொடுக்கா முடியா கெட்ட வார்த்தைகளுடன்
மனிதனின் மூன்றாம் வருகை ஆரம்பமானது 
இயேசுவின் இரண்டாம் வருகை கேள்விக்குறியானது...!

நாம் எவ்வாறு?
வருகை எதிர்பார்ப்புடன்..!

-ஜோ. பிரிட்டோ ராஜ்

Sunday, November 12, 2017

கூட்டத்தில் ஒருவன் (Thanks for Memory)


கூட்டத்தில் ஒருவன்...!

சில காலங்கள்
சில கடந்துவந்த பாதைகள்
எப்பொழுது உணரவைக்கிறது...
இனிமையான இசையை கேட்கும்போதா...
தனிமையில் அமரும்போதா...
நண்பர்களுடன் சிரிக்கும்போதா...
உறவினர்களை சந்திக்கும்போதா...!
அப்படி ஒரு உணர்வு தோன்றியது - நேற்று என் 
நண்பன் அனுப்பிய குறும்படத்தை காணும்போது...!

சில படங்கள் - நம்
வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன...
அதன் ராகங்கள் - நம்மை
அதனோடு பயணிக்கவைக்கின்றன - என்னைப்போல்
பேனாவை கையிலெடுக்கவும் செய்கின்றன...!

சொல்ல முடியாதவைகளோ
மறந்து போனவைகளோ...
கண்களில் ஈரம் வந்துபோனது
மூச்சும் வெளிவர தவித்தது...
நாட்கள் கடந்துவிட்டதோ
என்பதை உணரவும் வைத்தது...!

நமது வாழ்க்கைமுறைகளை
சொட்ட சொட்ட ரசிப்பவர்கள்...
நம்மை சுற்றியுள்ளவர்களின்
எண்ணங்களை உணர்ந்துகொள்கிறோமா...
ஏன் அந்த தலைவலி - என
விட்டு செல்கிறோமா...!

குறும்படம் உணர்த்தியது - என்
நண்பனின் மனதை, உணர்வுகளை - அந்த
பிம்பங்கள் செதுக்கப்பட்டது என்னவோ
என்னைப்போன்றோரின் வாழ்க்கைப் பாதைகளை...!

சில நேரங்களில்
சில மனிதர்கள் - பலவகை
நினைவுகளை என்னிடம் விட்டுச்செல்கிறார்கள்...!
அது காலத்தில் கரைந்துபோவதும்
அழியாமல் எனைப்பின் தொடர்வதும்
நான் பழகும் விதத்தை பொறுத்தது - என்பது
இதன்மூலம் தெளிவாகப் புரிந்தது...!

என் மூளை அலமாரிகள் - நினைவுகளால் 
மூட்டைகட்டி அடைக்கப்படுகின்றன...
ஏதாவது ஒரு சந்தர்ப்பங்கள் - அதை
தூசு தட்டுகின்றன - இதைப்போல்
எழுதவும் வைக்கின்றன...!

அது நட்போ, காதலோ, உறவோ தெரியாது
வயதுகளை கடந்து சிந்திக்கும்போது..!
திரும்பி சென்று எட்டவும் முடியாது
வருகின்ற நினைவுகளை ஒதுக்கவும் முடியாது - ஆனால்
ரசிக்கிறேன் குறும்படத்தை
இரண்டு, மூன்றுமுறை திரும்பிப்பார்த்து...
என் நண்பனுக்காக - அவனுடன்
கழித்த பள்ளிப்பருவ நினைவுகளுக்காக...!
.
.
.
.
-ஜோ. பிரிட்டோ ராஜ்

Tuesday, October 17, 2017

விந்தையான மனிதன் நான்...! (A Strange Man)




விந்தையான மனிதன் நான்...!

எங்கே போகின்றேன்
என்னோடு பயணிக்காமல்...
ஏனோ வாழ்கின்றேன்
என்னையே உணராமல்...!

எழுதாத வார்த்தைகளில்லை - என்
வாழ்க்கை கதையை பிரசூரிக்க...
பார்க்காத மனிதர்களில்லை - என்
வாழ்க்கை நடையை விமர்சிக்க...!

யாரை மகிழ்ச்சிப்படுத்துகிறேன் - என்
கருத்துக்களோடு பயணிக்க...
யாரை மனமாற்றுகிறேன் - என்னை
படைத்தவனோடு வாழவைக்க...!

எத்தனை அன்புகளை வளர்த்துவிட்டேன்
அந்நியனுக்கு முன்மாதிரியாய் இருக்க...
எத்தனை சொந்தங்களை நேசித்துவிட்டேன்
என்னைப் போன்றோனுக்கு வழிகாட்ட...!

இறைவனோடு செல்ல நான்
உணர்த்தி வைத்த பகிர்வு என்ன...
மக்களோடு வாழ நான்
வாழ்ந்து கொள்ளும் வாழ்க்கை என்ன...!

இறைவனை தேடி – என்
மனமின்று கபட நாடகமாடுது...
பொழுதுபோக்க காலம் தேடி
இறைவன் இல்லம் நாடிவருகிறது...!

எத்தனை முறைகள் உறைத்திருக்கும் – அவர்
வார்த்தைகளும் வாழ்க்கைகளும்... - எதுவும்
தெரியாதவன் போல் நடந்துகொள்கிறேன்
ஒவ்வொரு தருணங்களிலும்...!

கதைகள் கூறி கவலை மறந்தாலும்
கருத்துப்பேசி காதைத் தைத்தாலும்
இவ்வளவுதானா என அலுத்துவிடுகிறது
என் மனமும் சிந்தனைகளும்...!

வாத்தியங்கள் மினுமினுக்க - இங்கு
அழகு குரல்கள் தேவைப்படுகிறது...
கடவுள் வார்த்தைகள் புரியவைக்க
கலாச்சாரமும் மாறுபடுகிறது...!

ஆடலும் பாடலும் வேண்டும் - என்
கருத்தை பகிர மேடையும் வேண்டும்...
அரைத்த மாவை சமைத்து சுவைக்க
அசைபோடும் மனிதனும் வேண்டும்...!

குறைசொல்ல கூட்டம் பார்ப்பேன்
நிறை ஏதும் கண்டதில்லையென்று...
நிறையேதும் வாசம்கொள்ளா மனதில்
குறைதானே குடிகொள்ளும் என்பதைமறந்து...!

இறைவனைத் தேடி களைப்படையவில்லை
இறைவன் யாரென்றும் அறியாமலில்லை – இருந்தும்
காதுகள் கேட்கின்றது
கண்கள் தேடுகின்றது
வாய் செபிக்கின்றது
மனம் நிம்மதி இழக்கின்றது
எங்கே இறைவன் எங்கே இறைவன் என்று – இன்றளவும்
எனது அந்நியனை அன்புசெய்யாமால்...!

இவ்வளவும் அறிந்த என்புத்திக்கு உரமூட்ட
மனிதர்கள் மூலம் பலமுகங்கள் வேண்டும்...
அது அழகாய் பிரசிங்கிக்கவேண்டும்
அது அழகாய் பாடவேண்டும்
அது நளினமாய் ஆடவேண்டும்
அது எனக்காக துதிக்கவேண்டும்
அது எனக்காக செபிக்க வேண்டும்
அது என்னை பரவசமூட்டவேண்டும்
அது என்னை திருப்திபடுத்தவேண்டும்
அது என்னை மகிழ்ச்சிபடுத்தவேண்டும்
அது எனக்கு பதவிகள் தரவேண்டும்
அது என்னை மதிக்கவேண்டும்
அது என் பேச்சை கேக்கவேண்டும்
அது என் கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டும்
அது என் மனம்போல் தான் நடக்கவேண்டும்

இவையெல்லாம் கிடைத்தும் போதாமல்
அனுதினமும் நிம்மதி வேண்டி
ஆலயம் தேடி அலைகிறேன்
எனக்குள்வாழும் கடவுளை மறந்து...!
.
.
.
- ஜோ. பிரிட்டோ ராஜ்

Wednesday, September 20, 2017

அன்னையின் திருவிழாவும், அன்பின் சங்கமங்களும்..! (Velankanni Feast, Bharain - 2017)

அன்னையின் திருவிழாவும்... அன்பின் சங்கமங்களும்...!

செவ்வாயின் மீதினிலே திருக்கொடியேற்ற
சந்திரனும் சூரியனும் அனலை மூட்ட
பூமித்தாய் சுடர்விட்டாள்
திருவிழா கோலம் பூண்டாள்...!

வர்ணிக்கயியலா உம் எழிலைக்காண
எல்லையில்லா மக்கள் வெள்ளம்
அரபிக்கடல்போல் ஆர்ப்பரித்ததம்மா...
உமைத்தேடி ஆலயம் வந்ததம்மா...!

தேனினும் இனிய ராகங்கள்
பருக தெவிட்டாத கீதங்கள்
காண்கொள்ளா அலங்காரங்கள்
வளம்குன்றா அஞ்சலிகள்
விலையில்லா இறைப்பணிகள்
அள்ளக்குறையா ஆன்மிகவழிபாடுகள்
அமுதம் போன்ற மறையுறைகள் - என
காண கண் கோடி வேண்டுமம்மா - எங்கள்
திருவிழா அதற்கு சாட்சியம்மா...!

கண்ணைப்பறிக்கும் தோரணமில்லை
காதைகிளிக்கும் ஒலிகளுமில்லை...
அமைதி ஒன்றே குடிகொண்டது
இறைமக்களின் அன்புச்சாரமாய் பிரதிபலித்தது...!

சேவைபுரிய கபடமில்லா மனங்கள்
அள்ளிதர கலங்கமில்லா உள்ளங்கள்...
பந்திவைத்து பரிமாற இடமில்லாமல் போயினும்...
பசிதீர்க்க இருப்பதை வைத்து
பகிர்ந்து கொண்ட நல்லுள்ளங்கள்...
இவையாவும் மண்ணுலகில் எப்படி சாத்தியம்
செய்துமுடித்தது எங்கள் புண்ணியம் - எங்கும்
இதுபோல் கண்டதுமுண்டோ...!
எங்களுடன் இணைந்து வாழ்ந்ததுமுண்டோ...!

தேவதைகள் மலர் தூவ
சேனைகள் செபமாலை ஓத
வானவர்கள் கீதம் முழங்க
அன்பியங்களின் பொற்குடை நிழலில்
ஒற்றுமையின் குலமாய் தேரைத்தூக்கினோம்
சிங்காரத்தேரினில் மாமரி பவனி வந்தாள்
நாடிவந்தோரை நலமாக்கும் ஆரோக்கியத்தாய்...
எங்கள் ஆரோக்கியத்தாய்...!

வியாழன் பார்வை பூமியை நோக்க
கிரகணம் பூண்டாள் அன்னை...
விழாக்கள் விரைவாய் நிறைவுற்றதைக்கண்டு
அன்னையும் கலக்கமுற்றாள்...
கொடியை கீழிறக்க அவளும் அடம்பிடித்தாள்..!
திருவிழாக்கள் மட்டும் வேண்டுமா
எம்மக்கள் இவ்வாறு கூடிசெபிக்க...
கொண்டாட்டங்கள் ஒன்றே போதுமா
எம்மக்களை இறைபாதையில் பயணிக்க - என
அன்னை நினைத்தது, அனைவருக்கும் புரிந்தது...!

தினம் திருவிழா காண
மனதில் இடமுண்டு - ஆனால்
ஓய்வறியா வாழ்க்கையில் நேரமுமுண்டோ...
இருப்பதை வைத்து உறவாட
ஒன்று கூடினோம் அன்னைக்காக...!

எக்கத்திக்கும் ஒலிக்க தீரமுழங்கி
இளையோர்கள் கொடிமரத்தை தூக்கிநிமிர்த்த
இணைந்தோர்கள் துளிர்க்கவைத்தனர்...
ஐயாயிரம் மக்கள் பிரார்த்தனைக்காக
ஐம்பதாயிரம்முறை பயிற்சிகள் எடுக்கப்பட்டன...
வெந்துபோகும் காலநிலைகள் ஒருபுறமிருக்க
வெஞ்சாமரம்வீசி விழாவிற்கு அச்சாரமிட்டனர்...
நன்றி மட்டும் தகுமா இவ்வர்ப்பணிப்புக்கு...
வாழ்த்து மட்டும் போதுமா இவ்விறைப்பணிக்கு...
அனைவரும் சேர்ந்து பறைசாற்றுங்கள்
அன்னையை சுமந்தது மனிதர்கள் அல்ல
நல்ல மனங்கள் என்று...
உலகோர்க்கு எடுத்துரைங்கள்
அன்னையை கொண்டாடியது ஆடம்பரங்கள் அல்ல
நல்ல மனிதர்கள் என்று...!

பாரில் நல் மனிதர்கள்
கூடி வாழும் இடங்கள் கோவிலாகின்றன...
தரணியில் அன்னையை
நாடிவாழும் மாந்தர்கள் அமைதிகாண்கின்றன...
இவையிரண்டும் சேர்ந்து கொண்டாடும்
திருவிழாக்கள் அன்பின் சங்கமமாகின்றன – என்றும்
எங்கள் உறவின் பாலமாகுகின்றன...!!!



-ஜோ. பிரிட்டோ ராஜ்