Sunday, November 12, 2017

கூட்டத்தில் ஒருவன் (Thanks for Memory)


கூட்டத்தில் ஒருவன்...!

சில காலங்கள்
சில கடந்துவந்த பாதைகள்
எப்பொழுது உணரவைக்கிறது...
இனிமையான இசையை கேட்கும்போதா...
தனிமையில் அமரும்போதா...
நண்பர்களுடன் சிரிக்கும்போதா...
உறவினர்களை சந்திக்கும்போதா...!
அப்படி ஒரு உணர்வு தோன்றியது - நேற்று என் 
நண்பன் அனுப்பிய குறும்படத்தை காணும்போது...!

சில படங்கள் - நம்
வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன...
அதன் ராகங்கள் - நம்மை
அதனோடு பயணிக்கவைக்கின்றன - என்னைப்போல்
பேனாவை கையிலெடுக்கவும் செய்கின்றன...!

சொல்ல முடியாதவைகளோ
மறந்து போனவைகளோ...
கண்களில் ஈரம் வந்துபோனது
மூச்சும் வெளிவர தவித்தது...
நாட்கள் கடந்துவிட்டதோ
என்பதை உணரவும் வைத்தது...!

நமது வாழ்க்கைமுறைகளை
சொட்ட சொட்ட ரசிப்பவர்கள்...
நம்மை சுற்றியுள்ளவர்களின்
எண்ணங்களை உணர்ந்துகொள்கிறோமா...
ஏன் அந்த தலைவலி - என
விட்டு செல்கிறோமா...!

குறும்படம் உணர்த்தியது - என்
நண்பனின் மனதை, உணர்வுகளை - அந்த
பிம்பங்கள் செதுக்கப்பட்டது என்னவோ
என்னைப்போன்றோரின் வாழ்க்கைப் பாதைகளை...!

சில நேரங்களில்
சில மனிதர்கள் - பலவகை
நினைவுகளை என்னிடம் விட்டுச்செல்கிறார்கள்...!
அது காலத்தில் கரைந்துபோவதும்
அழியாமல் எனைப்பின் தொடர்வதும்
நான் பழகும் விதத்தை பொறுத்தது - என்பது
இதன்மூலம் தெளிவாகப் புரிந்தது...!

என் மூளை அலமாரிகள் - நினைவுகளால் 
மூட்டைகட்டி அடைக்கப்படுகின்றன...
ஏதாவது ஒரு சந்தர்ப்பங்கள் - அதை
தூசு தட்டுகின்றன - இதைப்போல்
எழுதவும் வைக்கின்றன...!

அது நட்போ, காதலோ, உறவோ தெரியாது
வயதுகளை கடந்து சிந்திக்கும்போது..!
திரும்பி சென்று எட்டவும் முடியாது
வருகின்ற நினைவுகளை ஒதுக்கவும் முடியாது - ஆனால்
ரசிக்கிறேன் குறும்படத்தை
இரண்டு, மூன்றுமுறை திரும்பிப்பார்த்து...
என் நண்பனுக்காக - அவனுடன்
கழித்த பள்ளிப்பருவ நினைவுகளுக்காக...!
.
.
.
.
-ஜோ. பிரிட்டோ ராஜ்

No comments:

Post a Comment

Do U Like This...