Monday, December 31, 2018

இறைவனுக்கு ஒரு புத்தாண்டு மடல் (A New Year Letter to GOD 2019)


இறைவனுக்கு ஒரு மடல், புத்தாண்டு படி வேண்டி..!

எத்தனை புத்தாண்டுகள் வேண்டும்
எம்மக்கள் விடியல் காண இறைவா...
ஒவ்வொன்றாய் அடுக்குகிறேன்
உம்முன் தலைவா...!

ஒருவரையொருவர் மதிக்கும் மாண்பு தருவாயா
ஏழைகளுக்கு உதவும் கரங்கள் அருள்வாயா
பசி பஞ்சம் நாட்டைவிட்டு விலகச்செய்வாயா...
உழைப்பை சுரண்டா முதலாளி கொடுப்பாயா
விளைச்சலுக்கு உரித்தான ஊதியம் தருவாயா...
தொழிலாளிகள் கடன் சுமை குறையசெய்வாயா
நோயற்ற மனிதர்களாய்வாழ வழிசெய்வாயா...
அமைதியான குடும்பங்கள் அமைய செய்வாயா
தன்னிறைவுகாணும் செல்வம் கிடைக்க செய்வாயா...
மதங்களை வெறுக்கா மனநிலை கொடுப்பாயா
ஜாதிகளை ஒதுக்காத சகோதரத்துவம் கொடுப்பாயா...
பெண்ணியம் காக்கும் ஆண்மை அருள்வாயா
ஆணியம் வளர்க்கும் பெண்மை கொடுப்பாயா...
குடி இல்லா குடிமக்களாய் மாற்றித்தருவாயா
குடிசையில்லா வீடுகள் கட்டித்தருவாயா...
பேராசையில்லா மனிதனாய் வாழச்செய்வாயா
தவறான உறவுகளைவிட்டு விலகச்செய்வாயா...
பருவம் ஏமாற்றா காலநிலை அமைத்து தருவாயா
அழிவைதரும் இயற்கை சீற்றங்கள் அகற்றிவிடுவாயா...
சுரண்டல் இல்லா சமுதாயம் கொடுப்பாயா
நாட்டிற்கு நேர்மையான தலைவர்களை கொடுப்பாயா...
வளர்ச்சியில் முக்கியத்துவம் தரும் கட்சிகள் கொடுப்பாயா
வாழ்வாதாரத்தை அழிக்கா திட்டங்களை செயல்படுத்துவாயா...
இதோ எங்கள்...
தேவைகளைத்தான் உம்முன் அடுக்குகின்றோம் இறைவா...
இங்கு தேவைகளின்றி வாழ்க்கையில்லை தலைவா...
அன்பு வேண்டும்... அமைதி வேண்டும்...
வாழ்வும் வேண்டும்... வழியும் வேண்டும்...
வசதியும் வேண்டும்... வளமும் வேண்டும்...
இவைகளை பேண நல்ல மனிதம் வேண்டும்...
அருள்வாயா... – எம்மை
புதுபிறப்புகளாக மாற்றுவாயா...!
.
.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
.
பதில் தருவாய் என எதிர்பார்ப்புடன்
-      - ஜோ. பிரிட்டோ கிளாரா

Saturday, November 10, 2018

Oru Viral Puratchi - ஒரு விரல் புரட்சி


#ஒரு #விரல் #புரட்சி
புதிய தமிழகம் வேண்டும்
.
இயற்கை தழுவும் பசுமை காக்கவேண்டும்
இல்லாமை அற்ற மனிதர்கள் உருவாகவேண்டும்...*

ஒருவரை ஒருவர் மதிக்கவேண்டும்
நம்மில் ஏற்றத்தாழ்வுகள் மறைய வேண்டும்...*

பிரிவினைகள் மறையவேண்டும்
பிரிவினைவெல்ல ஒற்றுமை வேண்டும்...*

தாய் மொழியில் புலமை வேண்டும்
பிறமொழியையும் பயில வேண்டும்...*

சமூக பொதுநலவாதிகள் ஆட்சி ஆளவேண்டும்
வளர்ச்சியில் அக்கறையுள்ள மக்கள் வேண்டும்...*

மக்களை ஏமாற்றா அரசு வேண்டும்
அரசினை ஏமாற்றா மக்களும் வாழவேண்டும்...*

எதிர்கட்சியே மறையவேண்டும்
மக்கள்நலனில் அனைவரும் ஒன்றுபடவேண்டும்...*

சுதந்திரமாய் எவ்வீதியிலும் மக்கள் நடமாடவேண்டும்
பாதுகாப்பில்லாமல் தலைவன் மக்களை சந்திக்கவேண்டும்...*

வாழ்வுரிமையை மதிக்க வேண்டும்
வாழ்வின்பாதையை உருவாக்க வேண்டும்...*

அன்றாட விலைவாசி உயராமல் வேண்டும்
கையூட்டை நினையாத அரசு ஊதியம் வேண்டும்...*

எதிர்த்து கேள்வி கேட்கவேண்டும்
எதிர்வினையை உருவாக்காமல் அமையவேண்டும்...*

மதத்தில் மனிதம் வேண்டும்
சாதியில் சகோதரத்துவம் வேண்டும்...*

இனமென்ற ஒற்றுமை வேண்டும்
பிற இனத்தை வெறுக்கா மனநிலை வேண்டும்...*

பணம் மட்டும்நோக்கா முதலாளி வேண்டும்
வளர்ச்சியை நோக்கும் தொழிலாளியும் வேண்டும்...*

கண்ணியம்தவறா காவலன் வேண்டும்
மறுதவறு நடக்கா தண்டனை வேண்டும்...*

கொலை கொள்ளைகள் மறையவேண்டும்
கொடியநோய்களுக்கு முன் நடவடிக்கை வேண்டும்...*

இலவசம் வேண்டும் – அது
இல்லாதவனை மட்டும் அடையவேண்டும்...*

அனைவருக்கும் கல்வி வேண்டும்
காசுக்காக கல்வி என்பது மாறவேண்டும்...*

எதிர்கால முன்னேற்றம் வேண்டும்
எதிர்வினை கொடுக்கா அறிவியல் வேண்டும்...*

நடுநிலை பத்திரிக்கைகள் வேண்டும்
உண்மை மக்களை சென்றடைய வேண்டும்...*

இவற்றிலும் மேலான
சர்க்கார் அமையவேண்டும்...***
போட்டி, பொறாமை,
இன மத சாதி பண புகழ்வெறியற்ற
சமத்துவ மனிதர்களால்
புதிய தமிழகம் உருவாகவேண்டும்..!
.
ஜோ. பிரிட்டோ கிளாரா

Thursday, November 1, 2018

Justice for Rajalakshmi








நம்மில் எத்தனை கடவுள்கள் இருக்கின்றோம்..!

சிறுமியின் கதறல்களும்
தாயின் மன்றாட்டுக்களும் - என்
தேசத்தை நிம்மதியாய் தூங்கவிடுமோ...
இதுவும் ஒரு செய்திதான் என
அலட்சியமாக கடந்துவிடுமோ..!
சாதி எனும் பேரில்
சாக்கடை பூக்களாகிவிட்டோம்...
வெளியில் மனம் வீச
உள்ளே நாற்றமடித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்..!
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவை
இச்சாதிய பிரிவினை மாற..!
பெண் பிள்ளைகள்
இச்சமூகத்தின் போதைப் பொருள்களா..
வலுவின்மையை பயன்படுத்தி
வஞ்சிக்கிறது இவ்வுலகம்..!
தமிழ் நாட்டில் இத்தனை அண்ணன்கள் இருந்தும்
அவள் குரலுக்கு செவிகொடுக்காமல்
சிறுமியும் இறந்துவிட்டாள்
அவள் கனவுகளும் புதைந்துவிட்டது..!
பதில் சொல் சமூகமே
இன்னும் எத்தனை உயிர்கள்வேண்டும்
இச்சாதியை ஒழிக்க..
எம் பெண்களின் மானம் காக்க..!
ராஜலட்சுமி கடவுளிடம் முறையிட்டிருப்பாள்
இப்பாவியை மன்னியுங்கள் என்றும்.. – இனி என்போல்
இவ்வேதனையை யாரும் படக்கூடாதென்றும்..!
நம்மில் எத்தனை கடவுள் இருக்கிறோம்
சாதி, இன பாகுபாடு கடந்து - அவளை
நம் சகோதரியாய், பிள்ளையாய் அரவணைக்க..!
#JusticeforRajalakshmi #Rajalakshmi

-ஜோ. பிரிட்டோ ராஜ்
(அண்ணன்களில் ஒருவனாக)