Tuesday, December 5, 2023

Abandoned Mother - ஊதல் விளக்குகள்


 ஊதல் விளக்குகள்.?!?

(அனாதையான ஆதரவற்ற தேவிகளுக்காக)


கண்மையை தீட்டினா கருப்பாகி போவேன்னு

சீமையிலே எண்ணெய் வாங்கி

வளர்த்து வைத்த மேனியிது...

சிரித்துபேசி நான் நடந்தா

எம் மண்ணுக்கே மழைக்காலம்...

அழுது நானும் வருத்தப்பட்டா

இந்த ஊரே கூடி நலம்விசாரிக்கும்..!


பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்

தர்மமெடுத்து பிழைக்கிறார்களென

ஊரார் எங்களை நினைத்தாலும்...

கடிவாளமில்லா காத்தாடிபோல்

பட்டாம்பூச்சியாய் வலம் வருவேன்

காடு மேடு கடந்து நாளும்...

ஒற்றைக்காலி... குடுகுடுப்பக்காரி...

அடங்காபிடாரி என அண்டைவீடு பெயர்சூட்ட

அல்லி ராணியாய் இம்மண்ணில் வலம்வந்தேன்..!


பசிக்க நாலு பருக்கை இல்லை

படுக்க கிளியா பாயும் இல்லை...

ஆண்டிக்கு ஆசைப்பட்டு

அரசன் வந்து மாட்டிக்கிட்டான்...

தெருவில் கிடந்த அட்டைக்கு

ஒய்யார கோபுரம் கிடைத்தது..!

நாலு காசுக்கு படிச்ச பையன்

நறுக்குனு நாலு கேள்விகேப்பான்னு

நடை சாயும் வெயிலில்

மணிக்கணக்கை மனகணக்காக்கி நிற்ப்பேன்..!


விட்டகுறை தொட்டகுறையாய்

உறவுகள் வாசலில் வந்து நிற்க...

வாத்தியமும்பட்டாசாய் வெடித்து போனது

பஞ்சனையும் நாளாகி கசிந்து போனது...

வருசம் ஒன்றாய் இரண்டு வந்துநிற்க

மூன்றாவதும் மடியை விட்டு இறங்கமறுத்தது..

அரசனும் இளவல்களுக்கு அரண்மனை வேண்டி

நாயாய் பேயாய் காடுகரையெங்கும்

அலைந்து திரிந்து ஓடிப் பார்த்தான்...

நாலு காலிலும் தாவிப்பார்த்தவன்...

என் தலையெழுத்து என்னவோ

எட்டுக் கால் படுக்கையில் தூங்கிவிட்டான்..!


மும்மாரி தவறினாலும் பெற்றவைகளை

மூங்கில் கொம்பாய் வளர்த்துவந்தேன்...

நாள்கள் நாலா பக்கமும் ஓடிப்போச்சு

நரைமுடியும் பாதியாகியாச்சு...

நல்ல காரியங்கள் கடந்துபோச்சு

இடுப்பை உடைக்க வாரிசுகள் வரவுமாச்சு..

இறக்கை விரிந்ததால் என்னவோ -தனிக்

கூடு கட்டி வாழவும்போச்சு..!


ஓடி ஆட தெம்புமில்லை

கூடிப்பேச நாதியுமில்லை...

அங்கே இங்கே கூடு தேடி

கிடைப்பதை வாரி வாழலானேன்..

சிறுசுக வளர்ந்தபின் பேசக்கூட வழியில்லை

தனித்து விடப்படுவதை நினைத்து

இளவு வாயும் சும்மாயிருப்பதில்லை..!


நிதம் நாலு கிழம் வீடுவர

தனித்திருப்பதை நாளும் உளரலானேன்...

ராசாத்தி மகளுக்கு யாரு கண்ணுபட்டுதோ

மண்டை வழி கெட்டுப்போச்சுன்னு

வசையை மொத்தமா அள்ளி கொட்ட...

காலில் கிடந்த பிள்ளைகள் - இன்று

என் காலுக்கு சங்கிலி தேடுகிறது..!


பெத்ததெதல்லாம் எட்டி நிக்க

காலைக் கட்டி கோவிலில் விட்டனர்...

ஆடி பாடிய கால்கள் இது

ஆனை சங்கிலியைத் தாங்குமா...

இழுத்து செல்ல திடமுமின்றி

இறுகிய நரம்புகள் வலியால் துடிக்கிறது...

அனாதை போல யாருமின்றி

சூட்டில் உடல் வாடுகிறது...

நான் தாண்டிப்போன திண்ணையெல்லாம்

இன்று தண்ணி கூட தரமறுக்குது...

கிழிந்த துணியும் கீரல் உடம்பும் - எனைப்

பயித்தியம் போல் காட்டுகிறது...

மண்ணுக்கே அரசி இவள்

மடிக்கரிசிக்கு ஏங்கி தவிக்கிறேன்...

அடுப்பை காய வைக்காதவள் - இன்று

வயிறு காய்ந்து கிடக்கிறேன்...

அண்ணதானம் தினம் வேண்டி

நாளும் தவம் கிடக்கிறேன்..!


பெத்ததுதான் தேடவில்லை - எனக்கு

கோவில் தெய்வமும் துணையில்லை...

நான் இருந்தும் என்ன பயன் - இந்த

தேவிக்கு வேதனையே வரன்...

அழகுராசன் ஆத்தோடப் போனான்

ஆளாக்கிய பிஞ்சுக தவிக்கவிட்டும் போச்சு..!


தர்மம் கேட்டால் தடியெடுக்கிறார்கள்

தானம் கேட்டால் தள்ளி செல்கிறார்கள்

கலையழகி என கொஞ்சி வளர்த்தார்கள் - என்

கண்ணீரெல்லாம் வத்திப்போச்சு...

கைராசிக்காரி எனப் பெயரெடுத்தவள் - இன்று

கையேந்தி பிச்சைக்கேட்கும் நிலையுமாச்சு...

அழக்கூட முடியவில்லை - என்

அன்பை சுமக்க யாருமில்லை...

கோவிலுக்கு வருவீர்களெனில் - அங்கு

என்னைப்போன்ற ஒரு தேவியிருப்பாள்

தேனீராவது வாங்கிக்கொடுங்கள் - இந்த

ஊதல் விளக்குகள் அணையாமலிருக்க..!


- ஜோ. பிரிட்டோ கிளாரா