Sunday, January 7, 2018

குடிமக்களும்... குடியரசு தினமும்...! (Republic Day 2018 - Tamil Poet)

குடிமக்களும்... குடியரசு தினமும்...!

என்ன வேண்டும் இவ்வாழ்க்கைக்கு
புகழா... பணமா...
என்ன வேண்டும் இம்மனிதனுக்கு
பதவியா... பட்டமா..!

எது வேண்டும் மனிதனுக்கு
எது வேண்டாம் அவன் வாழ்வதற்கு..!

சந்தோசமாய் வாழ ஒரு வீடு
பஞ்சமில்லா பசிபோக்க உணவு
சுவாசிக்க மாசற்ற காற்று
நஞ்சு கலக்கா குடிநீர்
எந்திரமயமில்லா சுதந்திர வாழ்க்கை
தொழில் போட்டியில்லா நிறுவனங்கள்
அனுதின போராட்டமில்லா வாழ்க்கைகள்
பண சுகமறியா இளம் யுகம்
ஏற்ற இறக்கமில்லா மனங்கள்
இருப்பதை அள்ளிக்கொடுக்கும் கைகள்
எதிரிகளிடமும் எல்லைமீறா கால்கள்
எல்லாம் கிடைத்ததுபோன்ற நிம்மதியான புன்னகை
கிடைப்பதை சேர்த்து வைக்கா பரம்பரைகள்
இருப்பதை மறைத்து வைக்கா பதுக்கல்கள்
வாழ்வுமுழுவதும் நோயில்லா நீடிக்கும் ஆயுள்
பாகுபாடில்லா மனிதம் பேணும் மருத்துவமனைகள்
விலைமதிப்பில்லா சுகாதாரமான அங்காடிகள்
கலப்படமில்லா உணவுப்பொருட்கள்
குடிசையில்லா தேசம்
மாளிகையை நாடா மனிதர்கள்
கஞ்சத்தனமில்லா நாள்கள்
பகையறியா உறவுகள்
வழிபறியறியா திருடர்கள்
பெண்மையை மதிக்கும் ஆண்கள்
சேறு பூசிய ஆடைகள்
அடிமையறியா வேலைகள்
ஏழையில்லா ஊர்கள்
பிச்சை வேண்டாத மனிதங்கள்
பங்குப்போட விளை நிலங்கள்
கூறுபோடா வேலிக்கம்பிகள்
மதம்பிடிக்கா கோவில்கள்
தீண்டாமையில்லா ஜாதிகள்
சுயநலம்காணா அரசியல்வாதிகள்
சுனைதழுவா மலடற்ற பூமிகள்
அணைபோடா இனவேற்றுமைகள்
மொழியறியா பேச்சுக்கள்
தள்ளிநிற்கா நிறவேற்றுமைகள்
காலைவாரா அயலான்கள்
எல்லையில்லா அன்புக்கள்
கையேந்தா பிற உயிர்கள்
கரம் கொடுக்கும் நண்பர்கள்
இரத்தம் சிந்தா போராட்டங்கள்
பகையறியா கூலிப்படைகள்
பாதுகாப்பு வேண்டா தங்கசுரங்கங்கள்
கைது செய்யா காவலர்கள்
எல்லாவற்றிற்கும் மேலாக
பகுத்தறிவு கொண்ட மனிதர்கள்..!

வேண்டும் என் தேசம் இவ்வாறு - நான்
குடியரசில் வாழ்கிறேன் எனும் உரிமையோடு...
மாறுமா என் தேசம் இவ்வாறு - என்
குடிமக்களுக்காக இருக்கிறது என்ற நினைப்போடு...!

குடியாட்சி பேச்சில் மட்டுமல்ல
நமது செயலிலும்,  வாழ்விலும் உள்ளது...!
.
.
-குடிமகன் (ஜோ. பிரிட்டோ ராஜ்)

Tuesday, January 2, 2018

நிவாரணங்களும்... நிர்வாக சீர்கேடும்..! (Ockhi Cyclone & Government Activities)



நிவாரணங்களும்... நிர்வாக சீர்கேடும்..!

இழப்பீடுகள் ஊழல் இல்லை – இங்கு
உயிர் பீடுகள் மதிப்பும் இல்லை...
துக்கம் வந்து தொண்டை அடைக்க – எங்கள்
தூக்கம் தொலைந்து நாளாச்சு...
மூழ்கிப்போன பயிர்கள் நினைத்து – எங்கள்
மனங்கள் இன்று வரண்டுப்போச்சு...!

மார்பிலிட்டு தாலாட்டி வளர்த்த
பிள்ளையின் துயர்நீக்க - ஆர்ப்பரித்த
கடல் தாயின் கதறல்கள்
உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையோ...
எங்கள் பிள்ளைகள் தத்தளித்தது
உங்கள் புகைப்படங்களில் விழவில்லையோ...!

எம் மக்கள் சிந்திய வியர்வைத் துளிகள்
கடலோடு கலந்து போனதே - எங்கள்
இன்பமும் துன்பமும் உப்பாய் ஆனதே...
கடல் தான் எம் மக்களை கொன்றதா – இங்கே
கட்சி தான் தம் மக்களை கொன்றதா...
காப்பாற்ற கைகள் இல்லையே...
கண்துடைக்க கட்சிகள் இல்லையே...
விடை தெரிய வருடங்கள் வேண்டுமோ...
வெற்றுடலாய் கரைவந்து சேருமோ...!

மனங்களை நோகடித்து
பணம் கொடுத்து விலைபேசுகிறீர்...
ஆடிய தாண்டவம் அடங்குமுன்
மாண்ட உயிர்கள் கணக்கிடப்படுகிறதே – இன்று
காசுகொண்டு விலை பேசி
உடலுக்கு கூலி கொடுக்கப்படுகிறதே...!

கோடிகள் கொட்டி செலவு செய்து
வல்லரசு என காட்டிக்கொள்கிறது - இந்த
தேசத்தில் மனிதனை காக்க வழியின்றி
பிணங்கள் மேல் விலை பேசப்படுகிறது...!

கைவிடப்பட்டது மனித உயிர்களா
இல்லை மனித நேயமா...
காஸ்மீரில் அடிபட்டால்
குமரியில் வலி உணர்வதில்லை...
குமரியின் கதறல்கள்
சொந்த ஊர்களை கூட தாண்டுவதில்லை...
நாட்டு கொடிக்கும், நாட்டுப்பாடலுக்கும்
தோள்கொடுக்கும் தேசம்...
கடலில் தத்தளித்த எம் மீனவர்களுக்கு
கரம் கொடுக்கவில்லையே...
வரிமேல் வரி வாங்கி கொட்டிசேர்த்த தேசம்
எம்மவர்களை கரைதொட விடவில்லையே...!

சுட்டுக்கொல்லும் அந்நியனுக்கும்
சுடுகாடு வந்து நலம் விசாரிக்கும் நாட்டவனுக்கும்
என்ன வித்தியாசம்...
எங்கள் கண்ணீரை துடைக்க
நிதிகளை நீட்டும் முன்...
கரங்களை கொடுங்கள்...
காப்பாற்றா விட்டாலும், ஆறுதலாவது கூறட்டுமே
நாங்களும் இம்மண்ணின் மைந்தர்கள் தான் என நினைத்து...!

கடலும் எங்களை போராட விடவில்லையே
இந்த மனிதர்களின் இழிநிலை செயல்கண்டு...
ஆழிக்கடலும் வருந்துமோ – இனிமேலும்
எம்மக்களுக்கு துயர் கொடுக்குமோ..!
.
.
நேரில் சந்திக்கமுடியவில்லையாயினும்
ஆபத்திலிலுள்ளவர்கள் மீண்டுவர
மனதினுள் பிரார்த்தனை செய்யும்
உங்களில் ஒருவன்..!
தமிழன் ஜோ. பிரிட்டோ ராஜ்