விந்தையான மனிதன் நான்...!
எங்கே போகின்றேன்
என்னோடு பயணிக்காமல்...
ஏனோ வாழ்கின்றேன்
என்னையே உணராமல்...!
எழுதாத வார்த்தைகளில்லை -
என்
வாழ்க்கை கதையை
பிரசூரிக்க...
பார்க்காத மனிதர்களில்லை
- என்
வாழ்க்கை நடையை விமர்சிக்க...!
யாரை
மகிழ்ச்சிப்படுத்துகிறேன் - என்
கருத்துக்களோடு
பயணிக்க...
யாரை மனமாற்றுகிறேன் -
என்னை
படைத்தவனோடு வாழவைக்க...!
எத்தனை அன்புகளை
வளர்த்துவிட்டேன்
அந்நியனுக்கு
முன்மாதிரியாய் இருக்க...
எத்தனை சொந்தங்களை
நேசித்துவிட்டேன்
என்னைப் போன்றோனுக்கு
வழிகாட்ட...!
இறைவனோடு செல்ல நான்
உணர்த்தி வைத்த பகிர்வு
என்ன...
மக்களோடு வாழ நான்
வாழ்ந்து கொள்ளும்
வாழ்க்கை என்ன...!
இறைவனை தேடி – என்
மனமின்று கபட
நாடகமாடுது...
பொழுதுபோக்க காலம் தேடி
இறைவன் இல்லம் நாடிவருகிறது...!
எத்தனை முறைகள்
உறைத்திருக்கும் – அவர்
வார்த்தைகளும்
வாழ்க்கைகளும்... - எதுவும்
தெரியாதவன் போல்
நடந்துகொள்கிறேன்
ஒவ்வொரு
தருணங்களிலும்...!
கதைகள் கூறி கவலை
மறந்தாலும்
கருத்துப்பேசி காதைத்
தைத்தாலும்
இவ்வளவுதானா என
அலுத்துவிடுகிறது
என் மனமும்
சிந்தனைகளும்...!
வாத்தியங்கள் மினுமினுக்க
- இங்கு
அழகு குரல்கள்
தேவைப்படுகிறது...
கடவுள் வார்த்தைகள்
புரியவைக்க
கலாச்சாரமும்
மாறுபடுகிறது...!
ஆடலும் பாடலும் வேண்டும்
- என்
கருத்தை பகிர மேடையும்
வேண்டும்...
அரைத்த மாவை சமைத்து
சுவைக்க
அசைபோடும் மனிதனும்
வேண்டும்...!
குறைசொல்ல கூட்டம்
பார்ப்பேன்
நிறை ஏதும்
கண்டதில்லையென்று...
நிறையேதும் வாசம்கொள்ளா
மனதில்
குறைதானே குடிகொள்ளும்
என்பதைமறந்து...!
இறைவனைத் தேடி களைப்படையவில்லை
இறைவன் யாரென்றும் அறியாமலில்லை – இருந்தும்
காதுகள் கேட்கின்றது
கண்கள் தேடுகின்றது
வாய் செபிக்கின்றது
மனம் நிம்மதி இழக்கின்றது
எங்கே இறைவன் எங்கே இறைவன் என்று – இன்றளவும்
எனது அந்நியனை அன்புசெய்யாமால்...!
இவ்வளவும் அறிந்த என்புத்திக்கு
உரமூட்ட
மனிதர்கள் மூலம்
பலமுகங்கள் வேண்டும்...
அது அழகாய்
பிரசிங்கிக்கவேண்டும்
அது அழகாய் பாடவேண்டும்
அது நளினமாய் ஆடவேண்டும்
அது எனக்காக
துதிக்கவேண்டும்
அது எனக்காக செபிக்க
வேண்டும்
அது என்னை
பரவசமூட்டவேண்டும்
அது என்னை
திருப்திபடுத்தவேண்டும்
அது என்னை
மகிழ்ச்சிபடுத்தவேண்டும்
அது எனக்கு பதவிகள்
தரவேண்டும்
அது என்னை மதிக்கவேண்டும்
அது என் பேச்சை
கேக்கவேண்டும்
அது என் கருத்துக்களுக்கு
செவிசாய்க்க வேண்டும்
அது என் மனம்போல் தான்
நடக்கவேண்டும்
இவையெல்லாம் கிடைத்தும்
போதாமல்
அனுதினமும் நிம்மதி
வேண்டி
ஆலயம் தேடி அலைகிறேன்
எனக்குள்வாழும் கடவுளை மறந்து...!.
.
.
- ஜோ. பிரிட்டோ ராஜ்