Wednesday, September 20, 2017

அன்னையின் திருவிழாவும், அன்பின் சங்கமங்களும்..! (Velankanni Feast, Bharain - 2017)

அன்னையின் திருவிழாவும்... அன்பின் சங்கமங்களும்...!

செவ்வாயின் மீதினிலே திருக்கொடியேற்ற
சந்திரனும் சூரியனும் அனலை மூட்ட
பூமித்தாய் சுடர்விட்டாள்
திருவிழா கோலம் பூண்டாள்...!

வர்ணிக்கயியலா உம் எழிலைக்காண
எல்லையில்லா மக்கள் வெள்ளம்
அரபிக்கடல்போல் ஆர்ப்பரித்ததம்மா...
உமைத்தேடி ஆலயம் வந்ததம்மா...!

தேனினும் இனிய ராகங்கள்
பருக தெவிட்டாத கீதங்கள்
காண்கொள்ளா அலங்காரங்கள்
வளம்குன்றா அஞ்சலிகள்
விலையில்லா இறைப்பணிகள்
அள்ளக்குறையா ஆன்மிகவழிபாடுகள்
அமுதம் போன்ற மறையுறைகள் - என
காண கண் கோடி வேண்டுமம்மா - எங்கள்
திருவிழா அதற்கு சாட்சியம்மா...!

கண்ணைப்பறிக்கும் தோரணமில்லை
காதைகிளிக்கும் ஒலிகளுமில்லை...
அமைதி ஒன்றே குடிகொண்டது
இறைமக்களின் அன்புச்சாரமாய் பிரதிபலித்தது...!

சேவைபுரிய கபடமில்லா மனங்கள்
அள்ளிதர கலங்கமில்லா உள்ளங்கள்...
பந்திவைத்து பரிமாற இடமில்லாமல் போயினும்...
பசிதீர்க்க இருப்பதை வைத்து
பகிர்ந்து கொண்ட நல்லுள்ளங்கள்...
இவையாவும் மண்ணுலகில் எப்படி சாத்தியம்
செய்துமுடித்தது எங்கள் புண்ணியம் - எங்கும்
இதுபோல் கண்டதுமுண்டோ...!
எங்களுடன் இணைந்து வாழ்ந்ததுமுண்டோ...!

தேவதைகள் மலர் தூவ
சேனைகள் செபமாலை ஓத
வானவர்கள் கீதம் முழங்க
அன்பியங்களின் பொற்குடை நிழலில்
ஒற்றுமையின் குலமாய் தேரைத்தூக்கினோம்
சிங்காரத்தேரினில் மாமரி பவனி வந்தாள்
நாடிவந்தோரை நலமாக்கும் ஆரோக்கியத்தாய்...
எங்கள் ஆரோக்கியத்தாய்...!

வியாழன் பார்வை பூமியை நோக்க
கிரகணம் பூண்டாள் அன்னை...
விழாக்கள் விரைவாய் நிறைவுற்றதைக்கண்டு
அன்னையும் கலக்கமுற்றாள்...
கொடியை கீழிறக்க அவளும் அடம்பிடித்தாள்..!
திருவிழாக்கள் மட்டும் வேண்டுமா
எம்மக்கள் இவ்வாறு கூடிசெபிக்க...
கொண்டாட்டங்கள் ஒன்றே போதுமா
எம்மக்களை இறைபாதையில் பயணிக்க - என
அன்னை நினைத்தது, அனைவருக்கும் புரிந்தது...!

தினம் திருவிழா காண
மனதில் இடமுண்டு - ஆனால்
ஓய்வறியா வாழ்க்கையில் நேரமுமுண்டோ...
இருப்பதை வைத்து உறவாட
ஒன்று கூடினோம் அன்னைக்காக...!

எக்கத்திக்கும் ஒலிக்க தீரமுழங்கி
இளையோர்கள் கொடிமரத்தை தூக்கிநிமிர்த்த
இணைந்தோர்கள் துளிர்க்கவைத்தனர்...
ஐயாயிரம் மக்கள் பிரார்த்தனைக்காக
ஐம்பதாயிரம்முறை பயிற்சிகள் எடுக்கப்பட்டன...
வெந்துபோகும் காலநிலைகள் ஒருபுறமிருக்க
வெஞ்சாமரம்வீசி விழாவிற்கு அச்சாரமிட்டனர்...
நன்றி மட்டும் தகுமா இவ்வர்ப்பணிப்புக்கு...
வாழ்த்து மட்டும் போதுமா இவ்விறைப்பணிக்கு...
அனைவரும் சேர்ந்து பறைசாற்றுங்கள்
அன்னையை சுமந்தது மனிதர்கள் அல்ல
நல்ல மனங்கள் என்று...
உலகோர்க்கு எடுத்துரைங்கள்
அன்னையை கொண்டாடியது ஆடம்பரங்கள் அல்ல
நல்ல மனிதர்கள் என்று...!

பாரில் நல் மனிதர்கள்
கூடி வாழும் இடங்கள் கோவிலாகின்றன...
தரணியில் அன்னையை
நாடிவாழும் மாந்தர்கள் அமைதிகாண்கின்றன...
இவையிரண்டும் சேர்ந்து கொண்டாடும்
திருவிழாக்கள் அன்பின் சங்கமமாகின்றன – என்றும்
எங்கள் உறவின் பாலமாகுகின்றன...!!!



-ஜோ. பிரிட்டோ ராஜ்