Tuesday, July 19, 2016

அடையாளக் காணிக்கை - Symbolic Offerings in Catholic Church




அடையாளக் காணிக்கை

திருவிவிலியம்: அன்பு இறைவா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது. ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது;  உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.  என்று எபேசியர் 4 : 12 இல் வாசிக்கின்றோம். இளைஞர்களாகிய நாங்கள், எங்கள் அன்றாட வாழ்வில் இறைவார்த்தையை வாசிக்கவும், செயல்படுத்தவும் கடமைப்பட்டுள்ளோம் என்பதன் அடையாளமாக இத் திருவிவிலியத்தை காணிக்கையாக்குகின்றோம்.

மலர்கள்: அன்பு இறைவா! அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர் என்று மத்தேயு 5 : 9 இல் வாசிக்கின்றோம். எவ்வாறு இந்தப் பூக்கள் தங்கள் மலர்ச்சியாலும், மணத்தாலும் எல்லோரையும் மகிழ்விக்கின்றதோ, அது போல இளைஞர்களாகிய நாங்களும் உலகில் அமைதியை பரப்புவதன் மூலம், எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம் என்பதன் அடையாளமாக இம் மலர்களைக் காணிக்கையாக்குகின்றோம்.

எரியும் விளக்கு : அன்பு இறைவா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார் என்று யோவான் 8 : 12 இல் வாசிக்கின்றோம். இளைஞர்களாகிய நாங்கள் ஒளியாகிய இறைவனைப் பின்தொடர்ந்து, எங்களைச் சுற்றி வாழும் சகோதர சகோதரிகளின் வாழ்வில் ஒளியேற்ற கடமைப்பட்டுள்ளோம் என்பதன் அடையாளமாக இந்த எரியும் விளக்கினைக் காணிக்கையாக்குகின்றோம்.

கோதுமை: அன்பு இறைவா! கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும், அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என்று யோவான் 12 : 24 ல் வாசிக்கின்றோம். எவ்வாறு இந்த கோதுமை மணிகள் தங்களது சாயலையே இழந்து பிறரது பசியாற்றுகிறதோ, அதுபோல இளைஞர்களாகிய நாங்களும் எங்களது சுயநல சிந்தனைகளை களைந்து, திருச்சபையின் வளர்ச்சிக்காக பொதுநலக்காரியங்களில் ஈடுபட கடமைப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்தவர்களாக இக்கோதுமை மணிகளை காணிக்கையாக்குகின்றோம்.

மரக்கன்று: அன்பு இறைவா! நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னை தாழ்வாகக் கருதாதிருக்கட்டும். பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை, தூய்மை ஆகியவற்றில் நீ விசுவாசிகளுக்கு முன் மாதிரியாய் விளங்கு என்று 1 திமோத்தேயு 4 ஆம் அதிகாரம் 13 ஆம் வசனத்தில் வாசிக்கின்றோம். எவ்வாறு இந்த இளம் மரக்கன்றானது எதிர்காலத்தில் நிறைய கனிகளையும், நல்லதொரு எதிர்காலத்தின் நம்பிக்கையும் தருகிறதோ, அதுபோல பங்கு இளைஞர்களாகிய நாங்களும் எங்கள் குடும்பத்திற்கும், திருச்சபைக்கும் எங்களையே அர்ப்பணிக்க கடமைப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்தவர்களாக இம்மரக்கன்றினை காணிக்கையாக்குகிறோம்.


உப்பு: அன்பு இறைவா! / ``நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். / உப்பு உவர்ப்பற்றுப் போனால் / எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? / அது வெளியில் கொட்டப்பட்டு / மனிதரால் மிதிபடும்;  / வேறு ஒன்றுக்கும் உதவாது.” / என்று / இறைவாக்கினர் மத்தேயு அதிகாரம் 5 : 13 ம் வசனத்தில் வாசிக்கின்றோம். / உலகிற்கு உப்பாக இருக்க அழைக்கப்பட்டிருக்கும் இளைஞர்களாகிய நாங்கள், /  இந்த உலகில் / எங்களது இருப்பு மிக முக்கியமானது / என்பதை உணர்வோம். / எங்களது சிந்தனை மற்றும் செயல்களில் / உவர்ப்பற்று போகாமல், / உப்பைப்போல தூய்மையாக, / இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம் எனவும் / மற்றும் அதன்வழியாக / இறையருள் நிறைவாய் பெறுவோம். / என்பதை உணர்ந்தவர்களாக / இவ்வுப்பினை காணிக்கையாக்குகிறோம்.