Sunday, May 10, 2015

விசுவாசிகளின் மன்றாட்டு - Thanks for God (15/05/2015)




விசுவாசிகளின் மன்றாட்டு - தூய இருதய அரேபிய அன்னை ஆலயம், பஹ்ரைன் (Sacred Heart Catholic Church, Bahrain)

Ø எங்கள் அன்புத்தந்தையே இறைவா! எங்கள் பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும் நல்லாயனாம் இயேசுவைப் பின்பற்றி, சமாதானத்தின் தூதுவர்களாகவும், அன்பின் வழிகாட்டிகளாகவும், நீதியின் கருவிகளாகவும் வாழ வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Ø  பஹ்ரைன், இலங்கை மற்றும் பாரத நாட்டை ஆளும் தலைவர்கள், சுய நலன்பாராது, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, வேலை வாய்ப்புள்ள சிறந்த செயல்திட்டங்களை பயனுள்ளவகையில் நிறைவேற்றவும், மக்கள் அனைவரும் கல்வி, பொருளாதாரம், பண்பாட்டில் மென்மேலும் வளரவும் அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Ø  அனைத்தையும் அமைத்தாளும் இறைவா! இறைப்பணிக்காக நீர் தேர்ந்து கொண்ட மறைப்பணியாளர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட பணியைத் திறம்பட நிறைவேற்றவும், உமக்கு உண்மையுள்ள ஊழியராய் விழங்கவும், தங்கள் இறைப்பணியில் இறுதிவரை நிலைத்திருந்து தங்கள் பணியாலும், புனித வாழ்க்கையாலும், திருச்சபைக்கு என்றும் நற்கனிகளைக் கொடுக்கின்ற அருள்வரத்தைத் தரவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Ø  எங்கள் அன்புத்தந்தையே! ஒரே திருமுழுக்கினால் உமக்கு சொந்தமான நாங்கள், முழுமையான விசுவாசத்தால் இணைக்கப்பெற்று, ஒரே குடும்பமாக உமது அழைப்பிற்கேற்ப வாழவும், உண்மைக்குச் சான்று பகிர்ந்து வாழவும், விசுவசிப்போர் அனைவரிடமும் ஒற்றுமையும், அமைதி உணர்வும் உருவாக, உறுதியுடன் உழைக்கவும், உமது ஆவியின் அருளைப் பொழியவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


Ø  /உங்களுக்கு அமைதி உரித்தாகுக/ என்று மொழிந்த எங்கள் அன்புத்தந்தையே! பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மற்றும் இயற்கை இடர்பாடுகளால், உலகில் அமைதியற்ற மற்றும் ஆதரவற்ற நிலையைக் காண்கின்றோம். இயேசுவே! இந்நிலை மாற்றி நாடுகளை ஆளும் தலைவர்களின் அறிவுத்திறனாலும், ஆக்கச்செயல்களாலும், மக்களின் ஒத்துழைப்பாலும், உலகில் நீடித்த அமைதியும், உதவும் மனப்பான்மையும், ஒருமைப்பாடும், வளமான வாழ்வும் பெற அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Ø  வளமான வாழ்வைத் தருகின்ற இறைவா! இதுநாள் வரையில் நீர் எங்களுக்குச் செய்துவருகின்ற சகல நன்மைகளையும் நன்றியோடு நினைவுகூர்கின்றோம். எங்களையும், எங்கள் பெற்றோர்கள், பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும், மென்மேலும் ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமென்றும், படிக்கின்ற எம் பிள்ளைகள் கருத்தாய் படிக்கவும், அவர்களுக்கு போதிய அறிவையும் சிறந்த ஞானத்தையும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Ø  உண்மையின் இறைவா! எங்கள் தொழில் முயற்சிகளை ஆசீர்வதித்து எங்கள் உழைப்பிற்கேற்ற நற்பலனை தந்து, எங்களுக்குப் போதுமான செல்வங்களை தந்து எங்கள் வாழ்வு வளம் பெறச்செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Ø  இரக்கத்தின் வடிவே இறைவா! எங்கள் குடும்பங்களில் மரித்தவர்களுக்கும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆன்மாக்களுக்கும், யாரும் நினையாத, மறந்துபோன ஆத்துமாக்களுக்கும் நித்திய இளைப்பாற்றியைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Ø  நமது தனிப்பட்ட தேவைகளுக்காக சற்று நேரம் மெளனமாக மன்றாடுவோம்....