Tuesday, March 4, 2014

தவக்காலம் ஆரம்பம் - இறைவார்த்தையின் அர்த்தத்தை உணர்ந்து செயற்படுவோம்..









தவக்காலம் ஆரம்பம்

தவக்காலம் எனப்படுவது மனமாற்றத்தின் காலம். நாம் எமது வாழ்வை ஒவ்வொரு பகுதியாக அலசி, ஆய்வுசெய்து மாற்றிக்கொள்ள அழைப்பு விடுக்கும் காலம் - ஆதலால் 2014ம் வருட தவக்கால தொடக்கநாளில் எமது உள்ளார்ந்த மனிதனின் புதுப்பித்தலைக் குறித்து ஆய்வுசெய்வது மட்டுமல்ல தவக்காலம் முழுவதும் மனதுருகி செபிக்க வேண்டும்.

 ஆயினும் வேலைப்பழு, குடும்ப சுமைகளோடு தவக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் இது சாத்தியமா
செபமென்பது ஏதோ சாதாரன விஷயமில்லை, அது இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஏற்படும் ஒரு உரையாடல் ஆதலால் செபித்தல் எனப்படுவது மிகவும் அவதானமாகக் கையாளப்பட வேண்டியது மட்டுமல்ல.. குறிப்பாக எமது வேண்டுதல்கள் மற்றும் வழிபாடுகள் வெளிவேடமற்றதாக குறை சொல்லுக்கு அப்பாற்ப்பட்டதாக இருத்தல் வேண்டுமெனவும் இன்றைய நற்செய்தி எம்மை மறைமுகமாக எச்சரிக்கின்றது, ஏனெனில் அடுத்தவரது பாராட்டைப் பெறும் வகையில் செய்யப்படும் எவ்வித வழிபாடுகளும் எமக்கு இறையாட்சியைப் பெற்றுத்தரமுடியாது.

எனவே பாவ இருள் என்ற தூசியில் கறைபடிந்து மூழ்கியிருக்கும் எமது ஆன்மாவின் இருண்ட காலத்தை ஆராய்வதோடு, எமது பழக்க வழக்கங்கள், பேச்சு, செயல், சிந்தனை, சாதியத்தோடு கூடிய ஆணவம், இறுமாப்பு, அதிகாரம், விட்டுக்கொடுக்க மறுத்தல், ஒத்துப்போகாத்தன்மை, பட்டம், பதவி நாட்டம் ஆகிய அனைத்திலிருந்தும் விடுபட தவக்காலம் எம்மை அழைக்கின்றது. எனினும் இவ்வுலகில் இடம்பெறும் படுகொலைகள், வன்செயல்கள், கட்டுக்கடங்காத பயங்கரவாதச் செயல்கள் என்பன எமது சிந்தனையை அதிகம் பாதிப்பதால் எமது உள்ளார்ந்த மனிதனை மாத்திரம் நாம் ஆராய்வதோடு நின்றுவிடாது, நெருங்கிவரும் இறையாட்சியில் தகுதிபெற நற்செய்தியை நம்பவேண்டிய கட்டாயத்தினை உணர்ந்து ஏற்றுக்கொள்வோம். 

 எமது அறச்செயல்களும், தவமுயற்சிகளும் விண்ணகத்திலிருக்கும் இறைதந்தையின் பார்வைக்கு உகந்தவையாக இருத்தல் முக்கியம் (மத்தேயு 6:16-18) என்பதனை மனதில் இருத்துவோம். இதனாலேயே நீங்கள் இனைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று கதவை அடைத்துக்கொண்டு மறைவாயுள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள் மறைவாய் உள்ளதைக்காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்“ (மத்தேயு6:6) என்று வேறுவிதமாகச் சிந்திக்கவும் இத்தவக்காலத்தில் நாம் விசேடமாக அழைக்கப்பட்டுள்ளோம்.

ஏனெனில் கடந்த காலங்களில் நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதல்ல முக்கியம், இனிவரும் காலங்களில் எப்படி வாழப்போகின்றோம் என்பதே முக்கியம் அதற்காக தவக்காலத்தில் கறுப்பு அல்லது வெள்ளை உடுத்தி நாற்பது நாட்களும் மரக்கறி உணவு மாத்திரம் உண்பதல்ல தவமெனப்படுவது மாறாக இத்தவக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் எமது ஆசைகள், விருப்பங்களை ஒறுத்து வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.  

எம்மிடம் உள்ளவற்றை அடுத்தவரோடு பகிர்வதால் எமது வாழ்வில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க கேட்கப்படுகின்றோம்.  
எமது பகைவர்களையும் மன்னித்து அவர்களது மனமாற்றத்திற்காகவும் செபிப்போம். 
தேவையற்ற செயல்களிலிருந்து விலகி செபத்திற்கென விசேடமாக நேரமொதுக்கி செபிப்போம். 
 இத்தவக்காலத்தின் நாற்பது நாட்களும் எமது உள்ளார்ந்த மனிதனை ஆண்டவர் இயேசுவோடு பாலைநிலத்தில் உலாவர அனுமதிப்போம். இறைவார்த்தையின் அர்த்தத்தை உணர்ந்து செயற்படுவோம் இதுவே எமது மனமாற்ற முயற்சியாக அமையட்டும்.

வெளிவேடமற்ற வாழ்வின் எடுத்துக்காட்டான இயேசுவே! நான் எனது அன்றாட வாழ்வில் வெளிவேடமற்ற உண்மையுள்ள மனிதனாக வாழ்ந்திட அருள்புரிந்தருளும் ஆமென்.