Friday, December 22, 2017

வாழ்க்கையை வாழ்வோம்..! (Live Your Life Peacefully)

வாழ்க்கையை வாழ்வோம்..!

நீலநிற குடை பிடித்த வானம்
குடையை பதம்பார்க்கும் மழை
நூல்கள் இல்லா மேகங்கள்...
உணர்ச்சியில்லா காற்று...
சூட்டைகிளப்பம் சூரியன் - என
புடைசூழ வாழும்போது - எப்படி
நான் மட்டும் தனிமையாவேன்..!

மனிதன் படைத்தவைகள்
மனிதனுக்கு நிலையில்லை...
கடவுளின் படைப்புகள்
மனிதனையடையாமல் இருப்பதில்லை...
என்கின்றபோது - எப்படி
நான் மட்டும் இல்லாதவனாவேன்..!

சத்தமில்லா இரவுகள்
பல்லை இளிக்கும் நட்சத்திரங்கள்
தூக்க சோம்பலில் முகம்
குறைகூறும் அன்பு
தினந்தோறும் வேலை
அழுக்கான உடல்கள்
துள்ளி குதிக்கும் உள்ளங்கள்
வியப்பாக நோக்கும் ஆடிக்கார்கள்
வானளாவிய கட்டிடங்கள்
பார்த்து வியக்கும் ஏழைகள்...
தூக்கி வீசப்படும் உரிமைகள்
தட்டிக்கேக்கும் போராளிகள்...
சேரை வீசும் உலகங்கள் - அதில்
சோறு படைக்கும் விவசாயிகள்...
ஓய்வறியா தினப்பணிகள்
எதிர்நோக்கும் குடும்பங்கள்...
முன்னேற்றமில்லா தொழிலாளர்கள் - அதில்
சேர்த்து வைக்கும் முதலாளிகள்...
சுவரைத்தாண்டா சத்தங்கள் - அதை
சந்தைப்படுத்தும் சினிமாக்கள்...
வீரம் அறியா விளையாட்டுகள் - அதை
விளம்பரப்படுத்தும் சின்னதிரைகள்...
ஆள்வைத்து ஆதாயம் தேடும் மக்கள் - அதில்
காசாக்கி கரைசேறும் கட்சிகள்...
வீதியில் ஏழையின் ஏப்பங்கள்
வானூர்தியில் பணக்காரனின் பெருமூச்சுகள்...
கொசுக்கள் நாடும் குடிசைவீடுகள் - அதை
அளிக்கும் ஆலை மாடமாளிகைகள்...
ரோடு போட்டவனுக்கு அரசுப்பேருந்து - அதில்
சொகுசாய் போவனுக்கு மானியங்கள்...
கையேந்தும் வாயில்லா ஜீவன்கள் - அதை
வித்தைகாட்டி ரசிக்கும் மனிதங்கள்...
எல்லையில்லா சுதந்திரங்கள் - அதில்
காலாச்சாரத்தை பாடமாக்கும் அறிவிலிகள்...
ஓடுகின்ற காலங்கள் - அதை
ஓட்டிப் பார்க்கும் கடவுள்கள்... - என
ஏதோ ஒரு சூழலில் சிக்கி
சிகரமானதை தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்..!
கடைசியில் கிடைப்பதென்னவோ
வெற்றிபெற்றால் கைதட்டும் கூட்டமும்
தோல்வியுற்றால் வசைபாடும் நண்பர்களும்தான்...!

கரை ஊன்றா பறவைகளுமில்லை
வலிகளை கடக்கா மனிதனுமில்லை...
பிறரின் விமர்சனமும் விருப்பங்களும்
கடலில் விழும் மழைப்போன்றது
இனிப்பாய் பேசி வீணற்றுப்போகும்...!
நம் எண்ணங்களும் தேடல்களும்
கடலைச்சேரும் நதிகளைப்போன்றது
எல்லாம் கடந்தபிறகே கடைநிலைபோகும்...!
வருடங்கள் ஓடினாலும்
செல்வங்கள் கரைந்தாலும்
நடுக்கமில்லா மனமும்
சோர்வில்லா கால்களும் போதும்
வாழ்க்கை வாழ்வதற்கே - என
புரிய வைக்கும்...
வாழ்க்கையை வாழ்வோம் தன்னிறைவில்..!.

.

-ஜோ. பிரிட்டோ ராஜ்

Monday, December 18, 2017

இயேசுவின் இரண்டாம் வருகையும், இரண்டாயிரம் ஆண்டு எதிர்பார்ப்பும் (Second coming of GOD)



இயேசுவின் இரண்டாம் வருகையும்...! 
இரண்டாயிரம் ஆண்டு எதிர்பார்ப்பும்...!

திங்களில் விழித்தெழ
செவ்வாயில் சோம்பல் நீக்கினான்... 
புதனோடு செயல் துவக்க
வியாழனில் தன்னை தயார்படுத்தினான்...
வெள்ளியில் ஏற்ப்பட்ட உடல் வேதனையில்
சனியில் கிடைத்தது போதுமென சோர்வுற்றான்..
ஞாயிறில் கிடைத்ததை உண்டுகுடித்து ஏப்பமிட்டான் – மீண்டும்
திங்களில் விழித்தெழ...
எத்தனை வருடங்கள் இவ்வாறு கடக்கின்றன
அனுதின அலுப்போடு...
ஆண்டவனுக்கும் இதுதான் தேவையோ - என
செபஸ்தியானும் தன்னையே கேட்டுக்கொண்டான்...!

எலிகள் இரண்டு அங்கும் இங்கும் ஓட...
கூரை ஓட்டையை வேவுபார்த்தவன்போல்
மல்லாக்க படுத்து விட்டத்தை முறைத்தான்...
மனதில் எழுந்த சோம்பலோடு
வேலைக்கு விடுப்புகொடுத்து புத்திக்கு வேலைகொடுத்தான்...!

கிறிஸ்மஸ் தாத்தா இன்று வருவார்
கதவை பூட்டிக்கொள்வோம்...
பிறக்காத ஒருவருக்கு மணிமகுடம் சூட்டி
காசு பார்க்கின்றன இந்த ஈனப்பிறவிகள்...
என்னைப்போல் வியர்வை நாற்றம் எழ
காசை தேடி அலைபவன்... - இவர்களின்
இரண்டாம் வருகை கதையை நம்புவேனோ...!

வெறும் கட்டுக்கதைகளை திணித்து
நயமாக என்னை நம்பவைக்கிறார்கள்...
வெட்டி போதனைகளா பேசி – என்
பலவீனம் பார்த்து ஏமாற்றுகிறார்கள்...!

யார்தான் நம்புவார்கள்
கடவுள் பிறந்தது மாட்டுத்தொழுவமென்று...
யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்
மனிதன் கடவுளை கொன்றானென்று...!

அறிவில்லா மந்தை கூட்டத்தை
ஒருவன் மட்டும் மேய்த்தானாம்...
தவறிப்போன ஆடுகளை
தேடிபிடித்து அரவனைத்தானாம்...!

எல்லாம் வழிவழியாய் வந்த புரளிகளா - இல்லை
இவர்கள் பொழுதுபோக தயாரித்த நாடகங்களா...
அருமையாக வடிவமைத்துள்ளனர் 
ஆதிமுதல் அந்தம் வரை...
தொடரும் என போட்டுவிட்டு
இரண்டாயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டது...
கதாசிரியரும் கதாநாயகனும்தான் இன்னும் அமையவில்லை...!
வெறுப்புடன் பேசியவாறே – செபஸ்தியான்
மன்குவளை நீரெடுத்து
சூடேறிய உடம்பை குளிர்வித்து
விட்டம் நோக்கி கண்களை உயர்த்தினான்...!

நான் அதை முடிவுக்கு கொண்டுவருகிறேன்
கடவுள் என யாரும் இல்லையென்று...
என் வாழ்க்கையை நானே வாழ்கிறேன்
மனிதன் மட்டும்தான் நிஜமென்று...
முகத்தில் ஒரு நக்கல் புன்னகை வந்தது...!

கிரீக் கிரீக் என சத்தமிட்ட எலிகளை - அடக்கி
வைத்த கெட்டவார்த்தைகளால் கொட்டித்தீர்த்தான்...
ஒருநாள் நிம்மதியா தூங்கவிடுகிறதா – என
முனுமுனுத்துக்கொண்டே...
பானை வாயிற்று பசிக்கு அணைபோட
கஞ்சிகலயத்தில் வாய்வைத்தான்...
என்னா புளிப்பு...
ஊறுகாய்க்கு ஊர்வாய்களை பார்க்கணுமா – என
வெங்காயம் நாலை உடைத்து
வழிக்காதா தாடிகள் நனைய
முழங்கைவரை வழியவிட்டு குடித்துமுடித்தான்...!

நாட்டிலும் நிம்மதியில்லை
வீட்டிலும் நிம்மதியில்லை – என
சணல் கயிறு கட்டிலை தூக்கிக்கொண்டு
வெளிமுற்ற மரத்தடியில் காற்றாட
கால்மேல் கால்போட்டு
கற்பனைக்கு இடம் கொடுத்தான்...!

நம்பிக்கை இழந்துவிட்டேனோ - இல்லை
பிறர் பேச்சுக்கு அடிமையாகிவிட்டேனோ...
எது நிஜம்... எது பொய் - என
எப்படி உணர்ந்துகொள்வேன்...!

அழுதுகொண்டே பிறக்கின்றேன்
எவரின் தயவின்றி நடக்கின்றேன்
அறியா மனிதர் நடுவே வாழ்கின்றேன்..
யாருக்கும் பாரமின்றி போய்ச்சேர்கின்றேன்...
இதில் எங்கிருந்து வந்தது கடவுளும் மதங்களும்...!

கண்களை மூடுவோம் - ஓய்வுநாளில்
புத்திமான் ஆகவேண்டாம் – என நினைத்தவனுக்கு
எண்ணங்கள் வேறுபாதையை நோக்கின...
நடைபாதை பேச்சுகள் எரிச்சலூட்டுகிறது
நாய்கள் குறைக்கிறது
குருவிகள் ஓலமிடுகிறது
செடி பூச்சிகள் கத்துகிறது...
கண்களை மூடிய எனக்கு
காதுகளை மூடமுடியவில்லையே இறைவா – என
கத்தி சத்தமிட்டான் செபஸ்தியான்...!

திடீரென ஒரு ஞானோதயம்.. – ஆமா
இந்த சத்தமும் அமைதியும்
எங்கிருந்து வந்தது... யார் தந்தது...
இந்த இன்பமும் துண்பமும்
எங்கிருந்து வந்தது... யார் தந்தது...
இந்த கழிப்பும் கண்ணீரும்
எங்கிருந்து வந்தது... யார் தந்தது...
இந்த சுயபுத்தியும் முரண்பாடும்
எங்கிருந்து வந்தது... யார் தந்தது...!

கன்னியும் கருவுற்றதாய் கூறினார்களே
அதுவும் எவ்வாறு நடந்தது...
மாட்டுத்தொழுவமுதில் கடும்குளிரை
எவ்வாறு குழந்தை தாங்கிக்கொண்டது...!

அடி அடியாய் எடுத்து வைத்து
வாழ்நாள் முழுவதும் நடந்தாலும்...
உலகை சுற்றிவர முடியுமா...
இராண்டாயிரம் ஆண்டிற்கு முந்திய நிகழ்வு
பூமியை சுற்றியது எவ்வாறு...!

தலை கிர்ரென்றது செபஸ்தியானுக்கு
ஒருவேளை கடவுள் இருப்பது உண்மையோ..
அப்படியே இருந்தாலும்
கடவுள் மனிதன் கையால் சாவாரா
மனிதனுக்காக தான் கடவுளும் மரிப்பாரா..
நம்புகிற மாதிரியா உள்ளது - என
அலுத்துக்கொண்ட செபஸ்தியானுக்கு
உச்சியில் உரைத்தது...    
கட்டுக்கதைகள் பொய்யாக்க
எத்தனைக் காதுகள் வேண்டும்...
இவரை கல்வாரியில் அறைந்த செய்தி
ஊரெங்கும் ஒலிக்கிறதே...!

ஆண்டவனாய் சொல்லி அரசாண்டவர்கள்
மாண்டுபோனாரே...
இங்கு ஆண்டியாய் வந்தவர்
மக்களினுள் அரச வாழ்க்கை வாழ்கிறாரே - எப்படியென
தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்...!

யோசேப்பும், மேரியும் சுமந்தார்களே பத்துமாதம்
அவப்பெயர்களை தாங்கிக்கொண்டு... - உலகமே
ஆராதிப்பவன் தேர்ந்தெடுத்ததா மாட்டுத்தொழுவம்...
அன்று தலை சாய்க்க இடம்கொடா பூமி – இன்று
தலைக்குமேல் வைத்து கொண்டாடுகிறதே...!

என் தாயும் ஆடுகளை மேய்க்கிறாள்
அவையும் அவளை நாடுகின்றன..
உண்ணாதபோது எழுப்பும் சத்தங்கள்
அவளைக் கண்டதும் துள்ளிக்குதிக்கின்றனவே...
இங்கே யார் மேய்ப்பன்... யார் ஆடுகள்...!

தினம் கடுமையான வேலைகள்
என் வாழ்வை அலுப்பூட்டுகின்றன
ஊதியம் கண்டதும் அவைகள் நீங்கிபோகின்றன
இங்கே யார் முதலாளி... யார் தொழிலாளி...!

ஒன்றும் புரியாமல் எழுந்துவிட்டான்... 
சில்லென காற்று உரசி சென்றது
கூ என கூவும் குயிலின் ஓசை கேட்டது...
காற்றின் வேகத்திற்கும்
குயிலின் ராகத்திற்கும் ஏற்றாற்போல்
மரங்களும் இலைகளை அசைத்து நடனமாடின... 
மெலிதான புன்னகையோடு செபஸ்தியானும் ஜதி சேர்த்தான்..!

கடவுளும் இவ்வாறுதான் பூமியை ரசிக்கிறாரோ
என் வாழ்க்கையின் நிலைமைகளை பார்த்து... - நான்
சோர்ந்துபோகையில் இதைப்போல் புத்துணர்வாக்குகிறாரோ
என்னோடு சேர்ந்து வாழ்ந்து...!

மண்ணும் மனிதனும் தான் பணத்தால்
தரம்பிரிக்கப்படுகிறார்கள்... – ஆனால்
விண்ணும் விடையும் நம் மனத்தால்
தரம்பிரிக்கப்படுகின்றன...
என புனிதன்போல் யோசிக்க ஆரம்பித்தான்..
ஒருவேளை இதுதான் இரண்டாம் வருகையோ...!

சஞ்சலப்பட்ட மனது இப்போது நிறைவாய் உள்ளதே
விகோரமாய் முன்பு கேட்ட குரல்கள் இப்போது
சங்கீதமாய் விழுகிறதே...
புத்தனுக்கு இரண்டாம் வருகை ஆலமரத்தடியில்
எனக்கு வெளிமுற்றத்தில் நிகழ்ந்துள்ளதே... – என
தனக்குள் குதுகலித்துக்கொண்டான்...!

மனித பார்வைகளையும் எண்ணங்களையும் மாற்றும்போது
அங்கே இறைவனின் இரண்டாம் வருகை துளிர்விடுகிறது...
இறைவனும் வந்ததும் அவ்வாறே
நம்மோடு வாழ்ந்ததும் அவ்வாறே – எனவே
ஆயத்தப்படுவோம் அமைதிக்காக...
இரண்டாயிரம் ஆண்டு எதிர்பார்ப்புகளுடன் கூடிய
நம் உள்ளங்களில்...
இறைவனின் இரண்டாம் வருகைக்காக...!

செபஸ்தியானின் மனம் அக்களித்தது
கயிறு கட்டிலை தூக்கி அக்கிளில் வைத்துக்கொண்டு
வீட்டிற்குள்ளே எட்டிப்பார்த்தான்...
எலிகள் இரண்டும் சிந்திய காஞ்சியில் வாய்வைத்தன...
எடுத்தான் கட்டையை போட்டான் ஒரு அடியை
இரண்டும் தலைதெறிக்க ஓடின..
செவிகொடுக்கா முடியா கெட்ட வார்த்தைகளுடன்
மனிதனின் மூன்றாம் வருகை ஆரம்பமானது 
இயேசுவின் இரண்டாம் வருகை கேள்விக்குறியானது...!

நாம் எவ்வாறு?
வருகை எதிர்பார்ப்புடன்..!

-ஜோ. பிரிட்டோ ராஜ்